18 காளைகளை அடக்கிய கார்த்திக்கு கார் பரிசு, காயம் 83 பேர்... - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஹைலைட்ஸ்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 18 காளைகளை அடக்கிய கருப்பாயூரணியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் முதலிடம் பிடித்து காரை பரிசாக வென்றார். இந்தப் போட்டியில் 83 பேர் காயமடைந்த நிலையில், 11 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: தமிழர்களின் வீரத்தை உலகறிய செய்யும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்ட போட்டி திருவிழா போல் நடத்தப்படும். இதில், அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி உலக புகழ்பெற்றது. தமிழகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றாலும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. இந்த போட்டியில் களம் இறங்குவதை மாடுபிடி வீரர்களும், காளை உரிமையாளர்களும் கவுரவமாகவும், பெருமையாகவும் கருதுவார்கள். பார்வையாளர்களும், அலங்காநல்லூர் போட்டியை வாழ்நாளில் ஒரு முறையாவது நேரில் பார்த்துவிட மாட்டோமா? என்ற ஆர்வத்தில் வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்து அலங்காநல்லூருக்கு படையெடுத்து வருவார்கள். இதனால், போட்டி நடக்கும் நாளில் அலங்காநல்லூர் கிராமம், திருவிழா கோலம் பூண்டிருக்கும்.

1200 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள்... - இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் முடிந்தநிலையில் இன்று காலை உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து சிறந்த காளைகள், இந்த போட்டியில் பங்கேற்பதால் இந்த போட்டி ஆரம்பம் முதலே அனல் பறக்கும். காலை 7 மணிக்கு அலங்காநல்லூர் காளியம்மன் கோயில் முன்பாக உள்ள வாடிவாசல் முன்பு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உறுதிமொழி வாசித்தார். வீரர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, வெங்கடேசன், பூமிநாதன், தமிழரசி உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் 1,200 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

பார்வையாளர்கள் உற்சாகம்... - போட்டியில் முதலில் உள்ளூர் கிராமத்து சுவாமி காளைகளான முனியாண்டி சுவாமி காளை, கருப்பசாமி கோியல் காளை, வலசை கருப்புசாமி கோயில் காளை போன்றவை அவிழ்த்துவிடப்பட்டன. இந்த காளைகள் கோயில் காளைகள் என்பதால் அவற்றை மாடுபிடி வீரர்கள் அடக்க முன் வரமாட்டார்கள். கோயில்காளைகள் அவிழ்த்து முடிந்தபிறகு ஒன்றன் பின் ஒன்றாக தனி நபர்கள் வளர்த்த காளைகள் அவிழ்ததுவிடப்பட்டன. மதுரை, திருச்சி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்பட தமிழகம் முழுவதும் இருந்து காளை உரிமையாளர்கள் தங்களது காளைகளை வாகனங்களில் கொண்டு வந்திருந்தனர். ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரசியமும், பரபரப்பும் குறையாமல் அனல் பறந்தன.

தங்க மோதிரம் பரிசு: வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்ட ஒவ்வொரு காளையும் துள்ளிக்குதித்து ஓடி வந்தன. அதனை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்க முயன்றனர். சில காளைகள் அடங்கா காளையாக மாடுபிடி வீரர்களை நெருங்க விடாமல் சீறி பாய்ந்தன. திமில்களை பிடித்து அடக்க முயன்ற வீரர்களை தூக்கி வீசி பந்தாடின. காளைகளின் சீற்றத்தையும், மிரட்டலையும் பொருட்படுத்தாமல் வீரத்தை நிரூபிக்க மாடுபிடி வீரர்கள் அதன் திமில்களை பிடித்து அடக்கி பார்வையாளர்களின் பாராட்டை பெற்றனர். அதுபோல் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டதும், தன்னை எதிர்த்து நிற்கும் மாடுபிடி வீரர்களை கண்டு ஓடாமல் அவர்களை புறமுதுகு காட்டி ஓட வைத்து நின்று விளையாடிய காளைகளை கண்டும் பார்வையாளர்கள் மெயர்சிலித்தனர். இதுபோன்ற ஜல்லிக்கட்டு மைதானத்தில் நின்று விளையாடி பார்வையாளர்கள் பாராட்டை பெற்ற சிறந்த காளைகளுக்கும், மிரட்டிய காளைகளை அடக்கி வீரத்தை நிரூபித்த வீரர்களையும் மேடைக்கு அழைத்து அமைச்சர் உதயநிதி மோதிரம் வழங்கி பாராட்டினார்.

ஏராளமான பரிசுப் பொருட்கள்.... - சிலர் தங்கள் காளைகள் மீது விலை உயர்ந்த பரிசுப் பொருட்களையும், ஒரு லட்சம், ரூ.50,000 பரிசுப்பொருட்களையும் அறிவித்து அடக்கினால் அவற்றை வழங்குவதாக அறிவித்தார்கள். இந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டது. ஆனால், சில காளைகள் ஜல்லிக்கட்டு களத்தில் புழுதியை கிளப்பி மாடுபிடி வீரர்களை நெருங்க விட வில்லை. அதையும் தொட்ட வீரர்களை, ‘என்னை தொட்டா கெட்ட’ என்கிற ரீதியில் கொம்புகளால் சுழற்றி தூக்கிப்போட்டது. அதில் பலர் காயமும் அடைந்தனர். அவர்களை காப்பாற்ற சென்ற போலீஸாரும், மற்ற சக மாடுபிடி வீரர்களும் காயம் அடைந்தனர். இத்தகைய காளை உரிமையாளர்களுக்கு உடனே அழைத்து மேடையிலேயே பரிசுப்பொருட்களும், பாராட்டும் விழா குழுவினரால் வழங்கப்பட்டன.

பிரபலங்களின் பெயரில் அவிழ்ககப்பட்ட காளைகள்: ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளை பிடித்த வீரர்கள், அடுத்தடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர். காளையை அடக்கிய ஒவ்வொரு வீரருக்கும், அடக்க முடியாத அடங்கா காளைகளுக்கும் தங்க காசு, மோதிரம், பீரோ, ப்ஃரிட்ஜ், வாஷிங் மிஷின், மெத்தை, விலையுர்ந்த சைக்கிள் போன்ற ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. பாஜக தலைவர் அண்ணாமலை காளை, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ் காளை, ஜல்லிக்கட்டுபேரவைத் தலைவர் ராஜசேகரன் காளை, டிடிவி.தினகரன் காளை, இலங்கை கவர்னர் தொண்டைமான் காளை, நடிகர் சூரி காளை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் காளைகள் வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்டன. இந்த காளைகளை மாடுபிடி வீரர்களால் பிடிக்க முடியவில்லை.

திரைப் பிரபலங்கள்: அமைச்சர் உதயநிதி போட்டிய தொடங்கி வைத்த காலை 7 மணி முதல் பகல் 11.45 மணி வரை பொறுமையாக அமர்ந்து பார்வையிட்டார். அதோடு ஒவ்வொரு முறையும் சிறப்பாக விளையாடி காளைகளையும், மாடுபிடி வீரர்களையும் எழுந்து பாராட்டவும் செய்தார். அவருடன் நடிகர்கள் அண்விஜய், சூரி இயக்குநர் ஏ.எல்.விஜய் போன்றவர்கள் அமர்ந்து போட்டியை கண்டு ரசித்தனர். சில முறை அவர்களையும் உதயநிதி பரிசு கொடுக்க வைத்தார்.

83 பேர் காயம்: போட்டியில் போலீஸார், ஆம்புலன்ஸ் உதவியாளர், காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் உள்பட 83 பேர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த 11 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், காயம் அடைந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்காக சுகாதாரத் துறை மற்றும் கால்நடை துறை சார்பாக சிறப்பு தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டிருந்தன.

காயம்பட்ட வீரர்களை மற்றும் காளைகளை மீட்க இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தன்னார்வலர்கள் இதற்காக பணியில் அமர்த்தப்பட்டனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு தற்காலிக மருத்வமனையில் முதலுதவி சிகிச்சை வழங்கி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தென் மண்டல ஐஜி நரேந்திர நாயகர் மேற்பார்வையில் டிஐஜி ரம்யா பாரதி, எஸ்பி-கள் பிரவீன் உமேஷ்(மதுரை), சிவபிரசாத்(தேனி) ஆகியோர் தலைமையில், 3,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கார்கள் பரிசு பெற்றவர்கள் விவரம்: சிறந்த மாடுபிடி வீரராக கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், மொத்தம் 18 காளைகளை பிடித்திருந்தார். இவர் 2022ம் ஆண்டில் இதே அலங்காநல்லூரில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வாகி கார் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 17 காளைகளை அடக்கி சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபிசித்தர் இரண்டாவது சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், கடந்த முறை இதே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கி முதல் பரிசான கார் பரிசு பெற்றவர். இவருக்கு இம்முறை பைக் பரிசாக வழங்கப்பட்டது. 12 காளைகளை அடக்கிய எம்.குன்னத்தூரை சேர்ந்த திவாகர், மூன்றாவது சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிறந்த காளையாக திருச்சி மேலூரை சேர்ந்த குணா என்பவரின் ‘கட்டப்பா’ என்ற காளைக்கு முதல் பரிசாக கார் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நாட்டு பசு மாடு ஒன்றும் கூடுதல் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது சிறந்த காளையாக மதுரை காமராஜர் புரம், வெள்ளக்காலி சவுந்தர் என்பரின் காளை தேர்ந்தெடுக்கப்பட்டது. இவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த வீரருக்கும், சிறந்த காளைக்கும் பரிசு கோப்பை ஒன்றும் வழங்கப்பட்டன. பார்க்க > தெறிப்புத் தருணங்கள் @ அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2024 - க்ளிக்ஸ் by எஸ்.கிருஷ்ணமூர்த்தி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE