சிறாவயல் மஞ்சுவிரட்டு | மாடு முட்டியதில் சிறுவன் உள்பட 2 பார்வையாளர்கள் உயிரிழப்பு

By இ.ஜெகநாதன்


சிவகங்கை: உலகப் புகழ் பெற்ற சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிறாவயல் கிராமத்தில் நடக்கும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் மாடு முட்டியதில் சிறுவன் உள்பட 2 பார்வையாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறாவயலில் ஆண்டுதோறும் தை 3-ம் நாள் பாரம்பரியமாக மஞ்சுவிரட்டு நடத்தப்படுகிறது. இந்த மஞ்சுவிரட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும். முன்னதாக, மஞ்சுவிரட்டுக்காக திடலைச் சுத்தம் செய்தல், தொழு மற்றும் பாதுகாப்பு வேலி அமைத்தல், பார்வையாளர்கள் அமரும் இடத்தைத் தயார் செய்தல் போன்ற பணிகள் நடைபெற்றன. இன்று (ஜன.17) காலை பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர், வாண வேடிக்கை, மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவுக்கு கிராம மக்கள் சென்றனர். தொழுவில் உள்ள மாடுகளுக்கு வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்தனர்.

இதனையடுத்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பொங்கல் திருநாளை முன்னிட்டு, நடைபெற்ற மஞ்சுவிரட்டு விழாவினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி முன்னிலை வகித்தனர்.

முதலில் கோயில் காளைகளை அவிழ்த்து விட்டனர். அதனைத் தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சிறாவயல் மஞ்சுவிரட்டை முன்னிட்டு திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, தென்கரை, அதிகரம், கிளாமடம், மருதங்குடி, கும்மங்குடி உள்ளிட்ட பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன.

விழாவை தொடங்கிவைத்துப் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், “தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு ஆகியவைகள் ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினை முன்னிட்டு, அனைத்துக் கிராமப்புறப் பகுதிகளிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக, சிவகங்கை மாவட்டம், சிறாவயல் மஞ்சுவிரட்டு என்பது உலக அளவில் புகழ் பெற்றதாக திகழ்ந்து வருகிறது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை எவ்வித இடையூறுன்றி சிறப்பாக தமிழகத்தில் நடத்திட, முதல்வர் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
அதன்படி, வரலாற்று சிறப்பு மிக்க நமது சிவகங்கை மாவட்டத்தில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வரும்,

உலகப் புகழ் பெற்ற சிறாவயல் மஞ்சுவிரட்டு, சிறாவயல் கிராமத்தில் இன்றையதினம் சிறப்பாக நடைபெறுகிறது. இம்மஞ்சுவிரட்டு விழாவில் பங்கேற்பதற்கென அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளுக்கும் உட்படுத்தப்பட்டு, பல்வேறுப் பகுதிகளிலிருந்து 272 காளைகளும், 81 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். மேலும், இப்பணியில் 8 மருத்துவக் குழுக்களும், காவல் துறையைச் சார்ந்த சுமார் 1,000 காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்விழாவினை ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தி வரும் சிறாவயல் மஞ்சுவிரட்டு ஒருங்கிணைப்பு குழுவினைச் சேர்ந்த அனைவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இவ்விழாவில் பங்கு பெற்றுள்ளவர்கள் அரசால் வகுக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றி பாதுகாப்புடன் இருந்து விழாவை சிறப்பாக நடத்திடுவதற்கு ஒவ்வொருவரும் உறுதுணையாக இருந்திட வேண்டும்” என்று பேசினார்.

இந்நிலையில் மஞ்சுவிரட்டில் மாடுகளை அவிழ்த்துவிட்டபோது எதிர்பாராத விதமாக மாடு முட்டி வலையபட்டியைச் சேர்ந்த பாஸ்கரன் (எ) ராகுல் 12 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் இறந்தார். அவரது அடையாளம் இன்னும் அறியப்படவில்லை. சிறாவயல் மஞ்சுவிரட்டில் இதுபோல் உயிரிழப்புகள் நேர்வது தொடர்கதையாகவே உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE