அடுக்குமாடிகளில் மின்கட்டண விகிதம் மாற்றப்படாததால் அதிக கட்டணம் செலுத்தும் மின்நுகர்வோர்

By செய்திப்பிரிவு

சென்னை: மூன்று மாடிகள் அல்லது அதற்கும் குறைவாக, லிப்ட் வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு மின்கட்டணம் குறைக்கப்பட்டுள்ள போதும், மின்வாரிய அதிகாரிகள் அதை மாற்றி அமைக்காததால், நுகர்வோர் கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரமும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது. இது அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ள லிப்ட், மோட்டார் பம்ப் போன்றவற்றை உள்ளடக்கிய பொது சேவை பிரிவுக்கும் பொருந்தியது. இந்நிலையில், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 2022-ம் ஆண்டு செப்.10-ம் தேதி முதல் மின்கட்டணத்தை உயர்த்தியது. அதில், பொது சேவை பிரிவுக்கு ‘1-டி’ என்ற புதிய கட்டண விகிதம் அமல்படுத்தப்பட்டது. அந்தப் பிரிவுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.8-ம், மாதநிரந்தர கட்டணமாக கிலோ வாட்டுக்கு ரூ.100-ம் நிர்ணயிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், மின்வாரிய ஊழியர்கள் ஆய்வு செய்து மாநிலம் முழுவதும் 10 லட்சம் பொது சேவை மின் இணைப்புகளுக்கு புதிய கட்டண விகிதத்தை அமல்படுத்தினர்.

கடந்த ஜூலை மாதம் மீண்டும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. அதில், பொது சேவை பிரிவுக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.8.15-ம், நிரந்தர கட்டணம் ரூ.102 ஆகவும் உயர்த்தப்பட்டது. இதனால், வாடகைதாரர்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டனர்.

‘1-இ’ கட்டண விகிதம்: இதையடுத்து, 10 வீடுகள் அல்லது அதற்குக் குறைவாகவும், 3 மாடிகள் அல்லது அதற்குக் குறைவாகவும், லிப்ட் வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு பொது சேவை பிரிவுக்கான கட்டணம்ஒரு யூனிட் ரூ.5.50 ஆகக் குறைக்கப்பட்டது. இதற்கு ‘1-இ’என்ற புதிய கட்டண விகிதம் ஏற்படுத்தப்பட்டது. இக்கட்டண விகிதம் நவ.1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இதையடுத்து, ‘1-டி’ பிரிவுக்கு மாற்றப்பட்ட மின் இணைப்புகளை ஆய்வு செய்து, அரசு நிபந்தனையில் இடம் பெறும் குடியிருப்புகளுக்கு ‘1-இ’ மின்கட்டண விகிதத்தை மாற்றும் பணியைக் கடந்த டிச.31-ம் தேதிக்குள் முடிக்க மின்வாரியம் உத்தரவிட்டது.

ஆனால், பல குடியிருப்புகளில் மின்கட்டண விகிதம் இன்னும் மாற்றப்படவில்லை. இதனால், ஒரு யூனிட்டுக்கு ரூ.5.50 ஆக மின்கட்டணம் குறைக்கப்பட்ட நிலையிலும் மின்நுகர்வோர் ஒரு யூனிட்டுக்கு ரூ.8.15 செலுத்தும் நிலையே உள்ளது. எனவே, மின்வாரிய அதிகாரிகள் இந்த மின்கட்டண விகிதத்தை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE