அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைக்கிறார்.

பொங்கல் பண்டிகையையொட்டி, தென் மாவட்டங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டி நடந்து வருகின்றன. இதில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இந்த போட்டியில் பங்கேற்க 6,099 காளைகள், 1,784 வீரர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. 1,000 காளைகள், 600 வீரர்கள் பங்கேற்க டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

போட்டியை காண பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தமிழகம் வந்துள்ளனர். சுற்றுலா துறை சார்பில் அவர்கள் சிறப்பு பேருந்துகளில் அழைத்து வரப்படுகின்றனர். இப்போட்டியை காண 250-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் சுற்றுலா துறையில் பதிவு செய்துள்ளனர்.

தென் மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் தலைமையில் மதுரை சரக டிஐஜி ரம்யா பாரதி மற்றும் 2 எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அலங்காநல்லூரை சுற்றி 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊருக்கு 2 கி.மீ. தூரம் முன்பாக, பார்வையாளர்கள், காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் தீவிரமாக சோதனை செய்யப்பட்ட பிறகே, போட்டி நடத்தும் இடத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

சிறந்த காளை, சிறந்த வீரருக்கு கார்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசாக வழங்குகிறார். காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் பைக், தங்க நாணயம், சைக்கிள், பீரோ, கட்டில், மெத்தை என பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படுகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE