மதுரை: ‘‘கார் பரிசு வேண்டாம், அரசு வேலை வேண்டும்’’ என்று பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வாகி கார் பரிசு பெற்ற இளைஞர் பிரபாகரன் உருக்கமாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டு மொத்தம் 10 சுற்றுகள் நடந்தது. இந்தப் போட்டியில் அதிக எண்ணிக்கையில், 14 காளைகளை அடக்கி மதுரை பொதும்பு கிராமத்தை சேர்ந்த பிரபாகர் சிறந்த மாடுபிடி வீரர் பரிசு பெற்றார். இவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் பி.மூர்த்தி கார் பரிசு வழங்கினார். 11 காளைகளை அடக்கிய அலங்காநல்லூர் அருகே சின்னப்பட்டி தமிழரசனுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ராய வயல் பகுதியை சேர்ந்த மருதுபாண்டி என்பவரின் சின்ன கருப்பு காளை சிறந்த காளையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த காளையின் உரிமையாளருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது. தேனி மாவட்டம் கோட்டூரை சேர்ந்த அமர்நாதன் என்பவரின் காளை சிறந்த காளை இரண்டாவது பரிசு பெற்றது. இந்தக் காளைக்கு அலங்கை பொன்குமார் சார்பில் கன்றுடன் கூடிய நாட்டின பசு மாடு வழங்கப்பட்டது.
சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டு கார் பரிசு பெற்ற பிரபாகரன் கூறுகையில், ‘‘தொடர்ந்து கடந்த சில ஆண்டாக பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிக காளைகளை அடக்க முயற்சி செய்து வந்தேன். ஆனால், நுட்பமான விளையாட்டுத் திறமை இல்லாததால் காளைகளை நெருங்கவே முடியவில்லை. நான் நினைத்ததும் நடக்கவில்லை. ஒரு சில காளைகளைதான் அடக்க முடிந்தது.
இந்த முறை கடந்த கால போட்டி அனுபவமும், போதிய பயிற்சியுடன் பாலமேடு ஜல்லிக்கட்டில் களம் இறங்கினேன். ஆரம்பம் முதலே அதிக காளைகளை அடக்க வேண்டும் என்ற திட்டத்துடன் விளையாடினேன். அதற்கு என் நண்பர்களும் உதவியாக இருந்தனர். என்னால் முடியும் என ஊக்குவித்தனர். அவர்கள் உதவியாலும், ஊக்கத்தாலும் இந்த முறை அதிக காளைகளை அடக்க முடிந்தது. அதற்கு பாராட்டாக கார் பரிசு வழங்கியுள்ளனர். நான் 9-ஆம் வகுப்பு படித்துள்ளேன். அரசு வேலை வழங்கினால் நன்றாக இருக்கும். இதுபோன்ற ஆடம்பரமான கார் பரிசு எங்களுக்கு தேவையில்லை.
இந்த கோரிக்கையை தொடர்ந்து சில ஆண்டாகவே வலியுறுத்தி வருகிறோம். உயிரை பனையம் வைத்து விளையாடுகிறோம். கார் பரிசுக்கு பதிலாக அரசு வேலை கிடைத்தால் எங்களுக்கு வாழ்வாதாரத்துக்கு உதவியாக இருக்கும். மற்ற விளையாட்டுகளில் வெற்றி பெற்றால் அரசு வேலை தேடி சென்று கொடுக்கப்படுகிறது. இதுவும் விளையாட்டுதான். அதைவிட நம்முடைய பாரம்பரிய விளையாட்டு. அதனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களுடைய கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்.
மாடுபிடி வீரர்களுக்கு ஆன்லைன் பதிவு தேவையில்லை. ஏனென்றால் இன்று நடந்த போட்டிக்கு நேற்று முன்தினம் இரவு வரை விளையாடுவேனா, இல்லையா என்பது தெரியாமல் பதற்றமாக இருந்தேன். காளைகளுக்கு டோக்கன் பெற அதிக போட்டியிருக்கும். ஆனால், மாடுபிடிவீரர்களுக்கு அதுபோல் போட்டியிருக்காது. அதனால், டோக்கன் முறையை தவிர்க்கலாம்’’ என்றார்.
சிறந்த காளை பரிசு பெற்ற காளை உரிமையாளர் மருதுபாண்டி கூறுகையில், ‘‘நான், எம்ஏ பிஎட் படித்துள்ளேன். ஆனால், தச்சு வேலை பார்க்கிறேன். ஜல்லிக்கட்டு விளையாட்டு மீது சிறு வயது முதலே ஆர்வம் உண்டு. என்னால் மாடுபிடி வீரராக களம் இறங்க முடியவில்லை. அதனால், கடந்த 2 ஆண்டாக காளை வளர்க்கிறேன். என்னுடைய குடும்பத்தினர் எதிர்த்தனர். ஆனால், என்னுடைய மனைவியும், நண்பர்களும் உதவியாக இருந்தனர். தற்போது அதற்கு பயனாக சிறந்த காளை உரிமையாளர் என்ற பெருமையை தேடி தந்துள்ளது. அதற்கு கூடுதலாக கார் பரிசு பெற்று தந்துள்ளது, தொடர்ந்து இதுபோல் காளை வளர்த்து இந்த பாரம்பரிய விளையாட்டு அழியாமல் இருப்பதற்கு என்னால் முடிந்த விஷயங்களை செய்வேன்’’ என்றார்.
ஜல்லிக்கட்டு செய்திகள் > சிறந்த காளை ‘சின்னக்கருப்பு’, சிறந்த வீரர் பிரபாகரனுக்கு கார் பரிசு - பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் 49 பேர் காயம் | பெண்கள் அவிழ்த்துவிட்ட காளைகள் முதல் தவிர்க்கப்பட்ட சாதி பெயர் வரை: பாலமேடு ஜல்லிக்கட்டு ஹைலைட்ஸ்!
முக்கிய செய்திகள்
தமிழகம்
37 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago