மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. 17 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த அவனியாபுரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் என்பவருக்கு 10 லட்சம் மதிப்பிலான கார் மற்றும் கறவை பசு பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல், சிறந்த காளைக்கும் கார் மற்றும் கறவை பரிசாக வழங்கப்பட்டன. இந்தப்போட்டியில் 2 காவலர்கள் உள்பட 51 பேர் காயமடைந்தனர்.
817 காளைகள் அவிழ்ப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று காலை 7 மணிக்கு மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்புக்கு பின் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் ஆகியோர் போட்டியினை கொடியசைத்து தொடங்கிவைத்தனர். இதனையடுத்து இந்த போட்டியில் கலந்துகொள்வதற்காக ஆன்லைன் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 435 மாடுபிடி வீரர்களும் 10 சுற்றுகளாக அனுமதிக்கப்பட்டதோடு 817 காளைகளும் அவிழ்க்கப்பட்டன.
களத்தில் மிரட்டிய காளைகள்: 9 சுற்றுகளிலும் இருந்து குறைந்தது 5 காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதி சுற்றில் கலந்துகொண்டனர். விதவிதமான பெயர்களில் அவிழ்க்கப்பட்ட காளைகள் வீரர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் களத்தில் நின்று விளையாடி வீரர்களை மிரட்டி வெற்றிபெற்று பரிசுகளை அள்ளி சென்றன.இதேபோன்று களத்தில் மிரட்டிய காளைகளை மாடுபிடி வீரர்களும் சீறிப்பாய்ந்து அடக்கி பல்வேறு பரிசுகளை பெற்றுச்சென்றனர். போட்டியின் போது காளைகளையும், மாடுபிடி வீரர்களையும் கைதட்டியும் ஆரவாரம் செய்தும் மக்கள் உற்சாகபடுத்தினர்.
17 காளைகளை அடக்கி... இப்போட்டியில் திறமையாக விளையாடி 17 காளைகளை அடக்கிய மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞருக்கு முதல் பரிசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் நிசான் கார் மற்றும் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சார்பில் கன்றுடன் கூடிய கறவை பசுவும் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல போட்டியில் சிறப்பாக விளையாடிய சிறந்த காளைக்கான பரிசை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையின் மறைந்த தலைவர் ஜி.ஆர்.கார்த்திக் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளைக்கு முதல் பரிசாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் நிசான் காரும், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சார்பில் கன்றுடன் கூடிய கறவை பசுவும் வழங்கப்பட்டது
எதிர்ப்பு: இதனைத்தொடர்ந்து 2 ஆவது மற்றும் 3 ஆவதாக சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைக்கான பரிசுகள் அறிவிக்கப்படாத நிலையில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டு களத்திலயே எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனைத்தொடர்ந்து 2 ஆவது இடம் பிடித்த மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமாருக்கு ஒரு பீரோ மற்றும் சைக்கிளும், 2ஆவது இடம் பிடித்த சிறந்த காளையான திருப்பரங்குன்றம் முன்னாள் எம்.எல்.ஏ சீனிவேலின் காளைக்கு ஒரு பீரோ மற்றும் சைக்கிளும் பரிசாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியின்போது 2400 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
போட்டியில் காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடிவீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள் ,குக்கர், கட்டில், சைக்கிள் , சில்வர் அண்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருட்கள் வழங்கப்பட்டன. காலை 7 மணிக்கு தொடங்கிய போட்டியானது மாலை 5மணி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் வி.கே.சசிகலா, டிடிவி தினகரன், திருமாவளவன் ஆகியோர பெயரில் அவிழ்க்கப்பட்ட காளைகள் வெற்றி பெற்றன.
போட்டியின் முடிவில் சிறந்த 2 மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகோப்பைகளும், பரிசுகளும் பாராட்டு சான்றுகளை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் ஆகியோர் வழங்கினர்.
51 பேர் காயம்: போட்டியில் மாடு குத்தியதில் 2 காவல்துறையினர் உட்பட மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், காளை உரிமையாளர்கள் , உள்ளிட்ட 51 பேர் காயமடைந்த நிலையில் 10 பேர் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு வேலை வழங்க வேண்டும்... இதனிடைய சிறந்த மாடுபிடி வீரருக்கான முதல் பரிசுபெற்ற அவனியாபுரம் கார்த்தி பேசியபோது, "முதல் பரிசுபெற்ற மாடுபிடி வீரருக்கு அரசு பணி வழங்க வேண்டும். இப்படி தொடர்ந்து கோரிக்கை வைத்தும், அரசு கண்டு கொள்ளவில்லை. ஐபிஎல் போட்டிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு இல்லை. எனது வெற்றிக்கு எனது பெற்றோர் மட்டுமே காரணம்" என்றார். இதேபோல், சிறந்த காளைக்கான பரிசு பெற்றவர்கள்,இந்தப் பரிசை உயிரிழந்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் ஜி.ஆர். கார்த்திக்குக்கு சமர்பிக்கிறோம் என்று தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
39 secs ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago