சென்னை: பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் காணும் பொங்கலை கொண்டாடும் வகையில் சென்னையில் பாதுகாப்பு பணியில்18 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப் பட உள்ளனர். மேலும், மெரினாவில் லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் திரள உள்ள நிலையில், கண்காணிப்பு பணியில் ட்ரோன் ஈடுபடுத்தப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நாளை மறுநாள் காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் மெரினா, பெசன்ட் நகர், கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் மிருக காட்சி சாலை, தீவுத்திடல் பொருட்காட்சி, திரையரங்குகள் கொண்ட வணிக வளாகங்கள் உட்பட பல்வேறு பொழுதுபோக்கு மையங்களில் திரள்வர். புத்தகக் காட்சியிலும் கூட்டம் அலைமோதும்.
தமிழ்நாடு சிறப்பு காவல் படை: இச்சூழ்நிலையில், எவ்வித அசாம்பாவித சம்பவங்களும் நிகழாத வண்ணம் தடுக்கும் வகையிலும், பொதுமக்கள் பாதுகாப்புடன் காணும் பொங்கலை கொண்டாடுவதை உறுதி செய்யும் வகையிலும் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார்.
கூடுதல் காவல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), சுதாகர் (போக்குவரத்து), அஸ்ரா கார்க் (வடக்கு) ஆகியோர் மேற்பார்வையில் சட்டம்ஒழுங்கு, குற்றப் பிரிவு, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை என மொத்தம் 18,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
3 லட்சம் பேர்: மெரினாவில் 3 லட்சம் பேருக்குமேல் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள சாலை மற்றும் கடற்கரையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
10-க்கும் மேற்பட்ட காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவக் குழுவினர் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தயார் நிலையில் தன்னார்வலர்கள்: மெரினாவில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி கடலில் குளிக்கும்போது யாரேனும் மூழ்கினால் அவர்களை மீட்கும் பணிக்கென மோட்டார் படகுகள் மற்றும் நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள மணற்பரப்பில் 15-க்கும் மேற்பட்ட தற்காலிக கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் நின்றவாறு பைனாகுலர் மூலம் போலீஸார் கண்காணிக்க உள்ளனர். மேலும், கடலில் பொது மக்கள் இறங்குவதை தடுக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும்,நெரிசலை பயன்படுத்தி சமூக விரோதிகள் கைவரிசை காட்டுவதை தடுக்கவும், கண்காணிக்கவும் ட்ரோன் கேமரா மூலம் போலீஸார் கண்காணிக்க உள்ளனர். பெண்களிடம் அத்துமீறுபவர்களை தடுக்கவும், பிடிக்கவும் பெண் போலீஸார் சாதாரண உடையில் கண்காணிக்க உள்ளனர்.
கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்காக போலீஸார் மூலம் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரையிலுள்ள 10-க்கும்மேற்பட்ட காவல் உதவி மையங்கள் மற்றும் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை தற்காலிக காவல்கட்டுப்பாட்டறையில் வைக்கப்பட்டுள்ளன.
கடற்கரைக்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோர் இங்குநிறுத்தப்பட்டு, அடையாள அட்டையில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி மற்றும் பெற்றோர் தொலைபேசி எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டி அனுப்பி வைக்கப்படுவார்கள். இதேபோல் தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் காணும் பொங்கல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
3 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago