''தேர்தலில் போட்டியிட கட்சியினர் வற்புறுத்தினால் மறுப்பு சொல்ல முடியாது'': துரை வைகோ

By என்.சன்னாசி

மதுரை: தேர்தலில் போட்டியிடுவது குறித்து இயக்க தலைமை, நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பத்திற்கு மறுப்பு சொல்ல முடியாது என, மதிமுகவின் முதன்மைச் செயலர் துரை வைகோ கூறினார்.

பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை புறநகர் வடக்கு மாவட்ட மதிமுக சார்பில், மதுரை யானைமலை பகுதியில், 'பூமித்தாயை பாதுகாப்போம் ' என்ற முழக்கத்தை முன்னெடுத்து 14 வது ஆண்டு யானை மலை மாரத்தான் நிகழ்வு இன்று நடந்தது. கட்சியின் முதன்மைச் செயலர் துரை வைகோ பங்கேற்று, இயற்கை பாதுகாப்பு குறித்து பேசினார். மாவட்ட செயலர்கள் முனியசாமி, மார்நாடு, ஜெயராமன், சிவகங்கை மாவட்ட செயலர் பசும்பொன் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து அவர் தனியார் ஓட்டல் ஒன்றில் செய்தியாளர்களிடம் கூறியது: ''நான் தேர்தலில் போட்டியிட விருப்பமின்றி எனது கருத்தை தெரிவித்தேன். எம்.பியாக வரும்போது, கட்சிக்கு கூடுதல் பலம், மக்களுக்கும் எனது கருத்துக்கள் பெரியளவில் போய்சேரும், இதற்கு எம்பி கூடுதல் வாய்ப்பு என இயக்கத்தினர் விரும்புகின்றனர். இன்னும், தேர்தல் கூட்டணி பேச்சு தொடங்கவில்லை. தொகுதி ஒதுக்கீடு வரும்போது, மூத்த நிர்வாகிகள் முடிவெடுக்கலாம்.

ஏற்கெனவே சட்ட மன்ற தேர்தலில் சாத்தூரில் போட்டியிட தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள் விரும்பியும் நான் நிற்கவில்லை. தேர்தல் அரசியலில் சில காரணத்திற்காக விருப்பம் இல்லை. நல்லக்கண்ணு போன்ற தலைவர்கள் எல்லாம் பெரிய பதவிக்கு வரவில்லை. எம்.பி, எம்எல்ஏக்களாக இருக்காமல் மக்களுக்கு நல்ல விஷயங்களை செய்திருக்கின்றனர். துரை வைகோ ஏன் தேர்தல் அரசியலை விரும்பவில்லை என்பதை ஒரு நேரத்தில் வெளியிடுவேன். ஆனாலும், தலைமை, இயக்கத்திலுள்ள தலைவர்கள், நிர்வாகிகள், முடிவெடுக்கும் போது, மறுப்பு சொல்ல முடியாது. எம்.பியோ, எம்எல்ஏவோ இரண்டும் ஒன்றுதான். எம்எல்ஏக்களால் நன்றாக செயல்பட வாய்ப்பு அதிகம். எம்.பியை பொறுத்த வரையில் அப்படி எதிர்பார்க்க முடியாது.

கரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி எம்.பிக்களுக்கு 2 ஆண்டுகள் தொகுதி நிதி கிடைக்கவில்லை. ஆண்டுக்கு எம்.பிக்கு ரூ. 2 கோடி தான் மேம்பாட்டு நிதி வழங்கப்படுகிறது. ஆனால் எம்எம்ஏக்கு ஆண்டுக்கு ரூ. 3 கோடி வழங்குகின்றனர். அப்படியெனில் 6 தொகுதிகளை உள்ளடக்கிய எம்.பிக்கு ரூ.18 கோடி வழங்கவேண்டும். பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சியில் எம்.பியாக செயல்படுவது கடினம். மக்கள் நிறைய கேள்வி கேட்பார்கள். நான் இயக்கத்தின் முதன்மைச் செயலர். கட்சியின் பிரநிதியாக செயல்படவே விரும்புகிறேன். எனது தந்தையிடம் அரசியல் தொடர்பாக பெரும்பாலும் பேசுவதில்லை. தன்னை தயார்ப்படுகிறார் என, மற்றவர்கள் நினைக்கலாம். ஒரு சதவீதம் கூட இல்லை. கடந்த ஒன்றரை ஆண்டில் எனது பேச்சு, பத்திரியாளர் சந்திப்பு உள்ளிட்ட எந்த நகர்வாக இருந்தாலும், அவரிடம் கருத்து கேட்பதில்லை. வைகோ குறித்த ஆவணப்படம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்பு போன்ற எதுவாக இருந்தாலும் அவரிடம் கலந்து பேசுவதில்லை.

பெரும்பாலும், எல்லா பத்திரிகைகளையும் படித்துவிடுவேன். இதன்மூலமே பல்வேறு தகவல்களும் தெரிந்து கொண்டு பேச முயற்சிப்பேன். நான் , நானாக இருக்கவே விரும்புகின்றேன். ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் புதிய அனுபவத்தை கற்றுக் கொள்கிறேன். 2024 மக்களவை தேர்தலில் யார் வெல்ல வேண்டும் என்பதைவிட, யார் வெற்றி பெறக்கூடாது என்பதே முதல்வர் ஸ்டாலினின் இலக்கு. இதை நாங்கள் பின்பற்று வோம். பிற கூட்டணி கட்சிகளும் பின்பற்றவேண்டும். எங்களது இயக்கத்தினருக்கும் கட்சிக்கான அங்கீகாரம், எதிர்பார்ப்பு இருக்கலாம். கூட்டணி தலைமைக்கும் சிரமம் இருக்கும். கூட்டணியின் முக்கிய இலக்கை மனதில் வைத்து விட்டுக்கொடுக்கவேண்டும் என்பது என்னுடைய எண்ணம். ஈழத்தமிழர்களை பொறுத்தவரை வைகோவின் மகன் என்ற முறையில், எங்கள் குடும்ப ரத்தத்தில் ஊறியது. ஈழ தமிழர்க்காக எனது தந்தை பொடா சட்டத்தில் நீண்ட காலம் சிறையில் இருந்தார். எனது சித்தப்பாவும் சிறையில் இருந்தவர்.

ஈழத்தமிழர்கள் இன்றைக்கும் முகாம்களில்தான் இருக்கின்றனர். இன்றும் சர்வாதிகாரமாகவே நடத்தப்படுகின்றனர். சுதந்திரமாக கருத்து சொல்ல முடிய வில்லை. தற்போது, நம்மால் என்ன சொல்ல முடியும் என்பதை மீடியாக்கள் மூலம் சொல்லவேண்டும். ஓராண்டுக்கு முன்பு ராமேசுவரத்தில் மதிமுக சார்பில், நடந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அரசு, ராணுவத்தை கண்டித்தோம். மத்திய அரசு இலங்கைக்கு கோடிக் கணக்கில் நிதியுதவி கிடைக்க உதவி செய்துள்ளது. நிதி வழங்கும் வாய்ப்பை பயன்படுத்தி தமிழருக்காக மத்திய அரசு, இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்திருக்கலாம். பிற பிரதமருக்கு கிடைக்காத வாய்ப்பை மோடிக்கு கிடைத்தது. ஆனாலும், அவர் செய்ய முன்வரவில்லை. மதவாத அரசியலை வளர்ப்பதிலேயே பாஜக கவனம் செலுத்துகின்றது. நீங்கள் இல்லை என்றால் சீனாவிடம் சென்றுவிடுவோம் என கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை அரசு, சீனாவை சொல்லி இந்தியாவிடம் சித்து விளையாடுகிறது. அவ்வப்போது அதை செய்து கொண்டும் இருக்கிறது.

நம்மை துருப்புச் சீட்டாக இலங்கை அரசு பயன்படுத்துகிறது. என்றைக்கும் இலங்கை அரசு திருந்தபோவது இல்லை. இந்தியாவுக்கு பாதுகாப்பு ஈழத்தமிழர்கள் தான் என, இந்திரா காந்தி கொள்கை முடிவெடுத்தார். அது நிறை வேறாமல் போனது. ஈழத்தமிழர்கள் எல்லா வற்றையும் இழந்து, இன்றும் திறந்த வெளி சிறைகளில் உள்ளனர். எதிர்காலத்தில் எதுவானலும் ஈழத்தமிழர்களை மையப்படுத்தியே தீர்வு காணவேண்டும். ஈழத்தமிழ் மீனவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையே மோதலை உருவாக்கி இலங்கை அரசு அரசியல் செய்கிறது. எனது கள அரசியலை வேறுமாதிரி பார்க்கிறேன். அதற்கேற்ப தயாராகிறேன். உணர்வு மிக்க ஆர்வமுள்ள குறைந்த இயக்க தோழர்கள் இருந்தாலும், அவர்கள் மூலம் பெரியளவில் இயக்கத்தை வளர்க்க முடியும் என நம்புகிறேன். மக்கள் பிரச்னைகளை பேசும் இளைஞர்களை கட்சியில் சேர்க்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறோம்.'' இவ்வாறு அவர் கூறினார். உடன் பூமிநாதன் எம்எல்ஏ, மாநகர மாவட்ட செயலர் முனியசாமி உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE