தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்பு, ‘பா.ஜ.க.வின் கொள்கைகளை அ.தி.மு.க. ஏற்கவில்லை’ என்பதை மக்கள் மத்தியில் உறுதி செய்யவதோடு, ‘அ.தி.மு.க. – பா.ஜ.க.விடமிருந்து அனைத்து வகையிலும் விலகி நிற்கிறது’ என்னும் கருத்தை, சிறுபான்மையினரின் மனதில் விதைக்கும் முயற்சிகளை எடுத்துவருகிறது அ.தி.மு.க. ஒருபக்கம் அதிமுக இப்படியான வியூகங்களை வகுக்க, மறுபக்கம் தங்களிடம் சிறுபான்மையினர் வாக்குகளை தக்க வைக்க தி.மு.க.வும் தீவிர முயற்சிகளை செய்துவருகிறது.
காய் நகர்த்தும் அ.தி.மு.க.! - கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபைக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 1998-ம் ஆண்டு நடைப்பெற்ற கோவை குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை, விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கவன ஈர்ப்புத் தீன்மானத்தைக் கொண்டு வந்தார். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ‘சிறுபான்மையினர் மீது அ.தி.மு.க.வுக்கு தீடீர் பாசம் ஏன்?’ என்னும் கேள்வியை எழுப்பினார். இதனால், சட்டசபையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே சலசலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாகப் பேச எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமிக்கு சபாநாயகர் வாய்ப்பளிக்கவில்லை. இதனால் அதிமுக வெளிநடப்பு செய்தது.
இந்நிகழ்வுக்குப் பின், கடந்த நவம்பர் 30-ம் தேதி, சேலத்தில் 700 இஸ்லாமியர்கள் அதிமுகவில் இணைந்தனர். அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ‘பாஜக அங்கம் வகித்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதைத் திமுகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இஸ்லாமியர்கள் அதிமுக பக்கம் சாய்ந்துவிடுவார்கள் என்று திமுக பயப்படுகிறது. அதிமுக அனைத்து மதத்தையும் சமமாக பார்க்கிறது. எந்த மதத்துக்கும் விரோதம் கிடையாது’ என்று பேசினார். மேலும், அதிமுக ஆட்சிக் காலத்தில் சிறுபான்மையினர்களுக்கு அறிவித்த திட்டங்களையும் நினைவு கூர்ந்தார்.
அதன்பின், கிறுஸ்தவ கூட்டமைப்பு மாநாடு மற்றும் எஸ்.டி.பி.ஐ. நடத்திய மதச்சார்பின்மை மாநாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றிருந்தார். இதில், எஸ்.டி.பி.ஐ. நடத்திய மதச்சார்பின்மை மாநாட்டில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, “எஸ்.டி.பி.ஐ. மாநாட்டின் கூட்டத்தை பார்க்கும்போது அ.தி.மு.க. வெற்றி உறுதி செய்யப்பட்டதாகவே கருதுகிறேன்.
தி.மு.க. கூட்டணி மதச்சார்பின்மையைக் கடைபிடித்து வருவதாகப் போலி தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியிலிருந்த 30 ஆண்டுகாலத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்கிறோம்” என்று குறிப்பிட்டதோடு, ‘‘வரும் நாடாளுமன்ற தேர்தலிலும், 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி இல்லை’’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அதேபோல், சிறுபான்மையினர் வலுயுறுத்தும் முக்கியமான கோரிக்கைகளையும் முன்வைத்தார், அதில், ‘தண்டனைக் காலம் முடிந்தும் சிறையில் வாடும் 33 இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க ஆளுநருக்குப் பரிந்துரைப்பதோடு நில்லாமல், மாற்று வழியைத் திமுக அரசு தேர்ந்தெடுக்க வேண்டும்; சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த, ஐ.ஏஎஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட உயரதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மக்களின் வாழ்க்கை நிலையைக் கண்டறிய, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினார். அதுமட்டுமில்லாமல், உச்சநீதிமன்றம் பில்க்ஸ் பானுவுக்கு ஆதரவாகக் கொடுத்தத் தீர்ப்பையும் வரவேற்றுப் பேசினார்.
தி.மு.க.வின் வியூகங்கள் என்ன? - எஸ்.டி.பி.ஐ., மாநாடு நடந்த இரண்டே நாட்களில், ஜனவரி 9-ம் தேதி, தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சிறுபான்மையினர் நலன் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், 2021-ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின் சிறுபான்மையினருக்காகக் கொண்டு வந்த திட்டங்களைப் பட்டிலிட்டார். குறிப்பாக, கிறுத்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இடஒதுக்கீடு போன்ற சலுகைகள் வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமென தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டத்தைச் சுட்டிக்காட்டினார்.
மேலும், சிறுபான்மை பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டித் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவது எனப் பல புதிய திட்டங்களை அறிவித்தார். மேலும், ‘தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மையினர் நலன்களைப் பாதுகாப்பதிலும் அவர்களின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்துவதிலும் திமுக அரசு கவனமாக உள்ளது’ என, அழுத்தம் திருத்தமாகக் கூறியிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
எஸ்.டி.பி.ஐ. மாநாட்டில் அதிமுக கலந்துகொண்டதே, தி.மு.க. தலைமைக்கு சிறுபான்மையினர் நலன் கூட்டம் நடத்தி, புதிய அறிவிப்புகளை வெளியிடும் நிர்பந்தத்தை ஏற்படுத்தியதாக அரசியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்தனர்.இந்த நிலையில் தற்போது, 33 முஸ்லிம் ஆயுள் சிறைக் கைதிகளில் 20 பேரை மட்டும் விடுதலை செய்ய தமிழக ஆளுநருக்குத் தமிழக அரசு பரிந்துரை செய்தது. அதுவும் கிடப்பில் உள்ள நிலையில், எஞ்சியுள்ள 13 பேரும் உயர்நீதிமன்றத்தை நாடினர். அவர்களின் 12 பேருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் பரோல் வழங்கியுள்ளது.
இதனை வரவேற்றுள்ள தி.மு.க., கூட்டணிக் கட்சியான மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, ”சிறுபான்மை நலனுக்காக தி.மு.க., அரசு செயல்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் இஸ்லாமிய சிறைக் கைதிகள் விடுதலைக்காகத் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறார்” எனப் பேசியிருக்கிறார். இந்தப் பரோல் அறிவிப்பை எஸ்.டி.பி.ஐ கட்சியும் வரவேற்றுள்ளது. எனினும் ’இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்வோம்’ என தி.மு.க., அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்தது. இப்படி சிறுபான்மையினர் வாக்குகளை வளைக்க அ.தி.மு.க.,வும் தி.மு.க.,வும் முனைப்பு காட்டி வருகின்றன.
ஏன் இந்த முன்னெடுப்புகள்! - கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி இணைந்ததால் தான் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காமல் அ.தி.மு.க. தோல்வியடைந்து என அ.தி.மு.க.வில் இருக்கும் முக்கிய தலைவர்கள் அன்வர் ராஜா போன்றோர் கருத்து தெரிவித்திருந்தனர். அந்த வகையில், தற்போது பா.ஜ.க. அங்கமாக வகித்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி சிறுபான்மையினர் கட்சிகளுடன் அ.தி.மு.க. தனிக் கூட்டணி அமைத்தால் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அப்படியான கூட்டணி அமைந்தால், அது தி.மு.க.வுக்கு சறுக்கலை உண்டாக்கும். மேலும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்முறைகளில் நடவடிக்கை எடுப்பதில் ஏற்பட்டுள்ள தொய்வு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மத்தியில் தி.மு.க. மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தற்போது இருக்கும் சிறுபான்மையினர் வாக்குகளை நழுவவிடாமல் இருக்க தி.மு.க.வும் பல்வேறு யுக்திகளைக் கையிலெடுத்துள்ளது.
தேர்தல் நெருங்கும் சூழலில் களம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். எனவே, சிறுபான்மை வாக்குகள் யாருக்கு என்பதை நாம் பொறுந்திருந்து தான்பார்க்க வேண்டும்
முக்கிய செய்திகள்
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago