செங்கல்பட்டு: தாம்பரம் - செங்கல்பட்டு இடையே கூடுதல் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ள நிலையில், கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு செங்கல்பட்டு - தம்பரம் - கடற்கரை இடையே கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை கடற்கரை–தாம்பரம்–செங்கல்பட்டு மார்க்கம், சென்னை புறநகர் பகுதியின்முக்கிய ரயில் போக்குவரத்து தடமாக உள்ளது.இந்த தடத்தில் தினமும், 250-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு முன்பு, போதிய ரயில் பாதை இல்லாததால், சென்னை கடற்கரை மின்சார ரயில்கள், தாம்பரம் வரை மட்டுமே அதிகளவில் இயக்கப்பட்டன.
செங்கல்பட்டு வரை கூடுதல் ரயில்களை இயக்க, ரூ.256 கோடியில் தாம்பரம் – செங்கல்பட்டு இடையே சுமார் 30 கிமீ தொலைவுக்கு மூன்றாவது ரயில் பாதை அமைக்கப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரயில் சேவையும் தொடங்கப்பட்டது. ஆனாலும், கூடுதல் மின்சார ரயில்களை இயக்காததால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து ரயில் பயணிகள் கூறியதாவது: செங்கல்பட்டு வரையில் கூடுதல் ரயில்களை இயக்கவே கூடுதல் ரயில் பாதை அமைக்கப் பட்டுள்ளது. ஆனால், தாம்பரம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்களின் சேவை, செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படாமல் இருக்கின்றன. இதனால் ரயில் பயணிகள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, பயணிகள் அதிகமாக செல்லும் காலை, மாலை நேரங்களில் ரயில் சேவை அதிகரிக்காமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரும் ரயில் பயணிகள், இந்த தடத்தில் காலை 8:30 மணிக்கு பிறகு ரயில் பிடித்து 9:35 மணிக்கே தாம்பரம் செல்ல முடியும். இதனால் ஒரு மணி நேரம் வரை பயணிகள் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு, தாம்பரம் ரயில்களை செங்கல்பட்டு வரையில் நீட்டிக்க ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செங்கல்பட்டு - தாம்பரம் வரை காலை 7 மணி முதல், 9 மணி வரை குறைந்தது 3 அல்லது 4 மின்சார ரயில் சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 3-வது ரயில் பாதை தயார் நிலையில் உள்ளதால் நெரிசல் மிகுந்த நேரங்களில் இந்த வழித்தடத்தில் கூடுதல் மின்சார ரயில்களை இயக்கலாம்.
இதோடு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளதால் தென் மாவட்டத்தில் இருந்து வரும் பயணிகள் கிளாம்பாக்கத்தில் இறங்கி அங்கிருந்து மாநகரப் பேருந்துகளை மட்டுமே பயன்படுத்தி, தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் ஜி.எஸ்.டி சாலையை ஒட்டியே ரயில் நிலையம் இருந்ததால் மக்களுக்கு வசதியாக இருந்தது.
கிளாம்பாக்கம் பகுதியில் ரயில் நிலையம் இல்லாததால் பொதுமக்கள் ரயிலில் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து பேருந்தில் வரும் பயணிகள் ஜிஎஸ்டி சாலையை ஒட்டியுள்ள மறைமலை நகர், பொத்தேரி ஆகிய 2 இடங்களில் உள்ள ரயில் நிலையங்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இது பயணிகளுக்கு வசதியாக உள்ளது. இதனால் செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு கூடுதல் மின்சாரா ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, மறைமலை நகர் முத்து.திருமலை கூறியது: செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைவரை மின்சார ரயில்கள் இயக்கப் படுகின்றன. இந்த ரயில்களில் செங்கல்பட்டு முதல், மறைமலை நகர் வரையுள்ள ரயில் நிலையங்களில் அதிக பயணிகள் ஏறுவதால்,அனைத்து பெட்டிகளும் நிரம்பிவிடுகின்றன. கூடுவாஞ்சேரி ரயில்நிலையத்தில் இருந்து ஏறும் பயணிகளுக்கு உட்கார்ந்து செல்ல முடியாவிட்டாலும், நின்று கொண்டு பயணம் செய்யவே இடம் கிடைப்பதில்லை. திங்கட்கிழமை மற்றும் சில விசேஷ நாட்களில் ரயில் பெட்டிக்குள் ஏறவே முடியாத அளவுக்கு பயணிகள் கூட்டம் இருக்கிறது.
இதனால் காலை நேரங்களில் சென்னைக்கு அலுவலகம் செல்வோர், உயர் நீதிமன்றம், தலைமை செயலகங்களில் பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் குறிப்பிட்ட ரயிலை தவறவிட்டு காலதாமதமாக செல்ல நேரிடுகிறது. தாம்பரம், கிண்டி, சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இணைப்பு ரயில்கள் மற்றும், பேருந்துகளையும் தவறவிட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
மறைமலை நகரிலிருந்து கட் சர்வீஸ்: சென்னை புறநகர் பகுதியான கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர் போன்ற இடங்களின் அபரிமிதமான வளர்ச்சிக்கு தக்கவாறு ரயில் போக்குவரத்தை அதிகரித்தாலும், இந்த இடங்களில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு ரயிலில் இடம் கிடைப்பதில்லை.
எனவே பல்லாவரம், செயின்ட் தாமஸ் மவுண்ட் போன்றரயில் நிலையங்களிலிருந்து "பீக் ஹவர்" எனப்படும் காலை நேரங்களில் அலுவலகங்களுக்கு செல்பவர்களுக்கு வசதியாக ரயில்கள் இயக்கப்படுவது போல, மறைமலை நகரில் இருந்து சென்னை கடற்கரை வரை மின்சார ரயிலை இயக்கினால் இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு வசதியாக இருக்கும். மேலும், புதிதாக திறந்துள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரே கிளாம்பாக்கம் ரயில் நிலையம் தொடங்கப்பட உள்ளதால், மறைமலை நகரில் இருந்து சென்னைக்கு செல்லும் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்றார்.
செங்கல்பட்டை சேர்ந்த ரயில் பயணி கோ.பாண்டியன் கூறியது: செங்கல்பட்டை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து, சென்னை நகருக்குள் பணி நிமித்தமாக சென்று வருகின்றனர். பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் மிக, மிக குறைவுஎன்பதால் மக்கள் சொற்ப செலவில் ரயிலில் பயணிக்க விரும்புகின்றனர். ஒரு தேநீர் குடிப்பதற்கான செலவில் சென்னைக்கு சென்று வந்துவிடலாம் என்று மக்கள் நினைப்பதால், சிறு, சிறு பொருட்கள் வாங்ககூட சென்னைக்கு சென்று வருகின்றனர், இதனால் ரயிலில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது கொண்டே இருக்கிறது.
அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் என்றில்லாமல், கட்டிட தொழில் செய்பவர்கள் முதல், கம்பெனிகளில் பணிபுரியும் அடிமட்டஊழியர்கள் வரை செங்கல்பட்டிலிருந்து செல்வதால், வாரத்தின் எல்லா நாட்களிலும் ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. அதற்கு தக்கவாறு ரயில்கள் இயக்கப்படவில்லை. சில வருடங்களுக்கு முன்பு வரை இருந்த அதேநிலைதான் இப்போதும் இருந்து வருகிறது. அதனால் கூடுதல் சேவைகள், குறிப்பாக "பீக் ஹவர்" நேரங்களில் இயக்கினால் பயணிகள்சிரமமின்றி பயணிக்க வசதியாக இருக்கும்.
மேலும், இதே தடத்தில் தொழில் நகரமானமறைமலைநகரில் இருந்தும், கூடுவாஞ்சேரியில் இருந்தும் சென்னைக்கு பயணிப்போரின் எண்ணிக்கை மிக அதிகம். இவர்கள் இடையில் உள்ள ரயில் நிலையங்களில் இருந்து பயணிப்பதால் ரயில்களில் ஏறுவதும் சிரமம், பெட்டிகளில் இடம் கிடைப்பதும் சிரமமாக உள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கப்பட்டுள்ளதால் அங்கு ரயில் நிலைய வசதி தற்போது இல்லை. இதனால் பொத்தேரி, மறைமலை நகர் பகுதியில் உள்ள ரயில் நிலையங்களை தென் மாவட்ட மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் கூடுதல் ரயில்களை இயக்குவது மிகவும் அவசியமாக உள்ளது. ரயில்வே நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago