மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது எனக்கு என்ன குறை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘‘எனக்கு உடல்நலம் இல்லை. நான் உற்சாகமாக இல்லை என்ற செய்தியை படித்தபோது சிரிப்புதான் வந்தது. தமிழகமும், தமிழக மக்களும் மகிழ்ச்சியாக இருக்கும்போது, எனக்குஎன்ன குறை’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அயலகத் தமிழர் நலன், மறுவாழ்வு துறை சார்பில் சென்னையில் 2 நாட்கள் நடந்த அயலகத் தமிழர் தின விழா நேற்று நிறைவடைந்தது. இதில், தமிழ் இலக்கியம், கல்வி, சமூக மேம்பாடு, உள்ளிட்ட 8 பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட அயலகத் தமிழர்களுக்கான விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். ‘எனது கிராமம்’ என்ற முன்னோடி திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

‘எனக்கு உடல்நலம் இல்லை. நான் உற்சாகமாக இல்லை’ என்ற செய்தியை படித்தபோது சிரிப்புதான் வந்தது. தமிழகமும், தமிழக மக்களும் மகிழ்ச்சியாக இருக்கும்போது, எனக்குஎன்ன குறை. அதைவிட எனக்கு வேறுஎன்ன வேண்டும். எனக்கு எப்போதும் மக்களை பற்றிதான் நினைப்பே தவிர,என்னை பற்றி இருந்ததே இல்லை. எந்த சூழலிலும், மக்களோடு இருப்பவன் நான். சக்தியை மீறி உழைப்பவன். எனவே, இதுபோன்ற செய்திகளை ஒதுக்கி தள்ளிவிட்டு, உழைத்துக் கொண்டே இருப்பேன்.

வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்கள் முதலீடுகளை ஒப்பந்தம் மூலம் அரசு மற்றும் தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்ய ஏதுவான சூழலை இங்கு உருவாக்கி இருக்கிறோம்.

எங்கு வாழ்ந்தாலும் தாய் தமிழகத்தை மறக்காதீர்கள். அடிக்கடி உங்கள் குழந்தைகளுடன் தமிழகம் வாருங்கள், கீழடி, பொருணை, ஆதிச்சநல்லூரை காட்டுங்கள். தமிழோடு இணைந்திருங்கள். எங்கு வாழ்ந்தாலும், தமிழக வளர்ச்சிக்கும், அரசுக்கும்துணையாக இருக்க வேண்டுகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

நிகழ்ச்சியில் துறை அமைச்சர் மஸ்தான், சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கா.சண்முகம், மலேசிய துணை அமைச்சர் எம்.குலசேகரன், முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் சதாசிவம், இலங்கை கிழக்குமாகாண ஆளுநர் எம்.செந்தில் தொண்டமான், இலங்கை எம்.பி. செல்வம் அடைக்கலநாதன், கனடா எம்.பி. லோகன் கணபதி, இங்கிலாந்து அமஸ்பரி மேயர் சாருலதா மோனிகா தேவேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE