தூத்துக்குடியில் வெள்ள சேதங்களை மீண்டும் விரிவாக ஆய்வு செய்த மத்தியக் குழு

By ரெ.ஜாய்சன்


தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் மீண்டும் இன்று விரிவாக ஆய்வு மேற்கொண்டனர்.

மழை வெள்ளத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய குழுவினர் மீண்டும் ஆய்வு 2 அணிகளாக 32 இடங்களை பார்வையிட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17, 18 தேதிகளில் அதி கனமழை பெய்தது. இதனால் தூத்துக்குடி மாநகரம் மற்றும் தாமிரபரணி கரையோர பகுதிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த மழை வெள்ளத்தால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 81 ஆயிரம் கோழிகள் உள்ளிட்ட 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள், 7500-க்கும் மேற்பட்ட வீடுகள், 1.42 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

இதனை தவிர சாலைகள், பாலங்கள், அரசு அலுவலக கட்டிடங்கள் என பல ஆயிரம் கோடி மதிப்பிலான பொது சொத்துக்களும் சேதமடைந்துள்ளன. இதேபோல் தனிநபர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ள சேதம் குறித்து 4 பேர் கொண்ட மத்திய குழுவினர் கடந்த மாதம் 20-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் நேரில் ஆய்வு செய்தனர். ஆனால், அப்போது அனைத்து இடங்களிலும் மழை வெள்ளம் பெருமளவில் தேங்கி நின்றதால் சேத மதிப்பை சரியான முறையில் கணக்கிட முடியவில்லை என கூறப்படுகிறது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். | படம்: என்.ராஜேஷ்

மீண்டும் ஆய்வு: இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் மீண்டும் விரிவான ஆய்வு நடத்த மத்திய குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக் குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையில் மத்திய வேளாண்மை கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குநர் கே.பொன்னுசாமி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் எஸ்.விஜயகுமார், மத்திய நிதி அமைச்சகத்தின் செலவுத்துறை துணை இயக்குநர் ரங்கநாத் ஆடம், மத்திய மின் துறை துணை இயக்குநர் ராஜேஷ் திவாரி, மத்திய நீர்வள அமைச்சக இயக்குநர் ஆர்.தங்கமணி, மத்திய ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் கே.எம்.பாலாஜி ஆகிய 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று மாலை தூத்துக்குடி வந்தனர்.

ஆய்வுக் கூட்டம்: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள சேதம் குறித்து மத்திய குழுவினர் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினர். இதில் தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், கூடுதல் நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ், மாவட்டத்தின் கண்காணிப்பு அதிகாரியான தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த், சிப்காட் மேலாண்மை இயக்குநர் கி.செந்தில் ராஜ், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ச. அஜய் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், சேத விபரங்களை தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மத்திய குழுவினரிடம் விரிவாக எடுத்துக் கூறினர்.

கள ஆய்வு: தொடர்ந்து மத்திய குழுவினர் 2 அணிகளாக பிரிந்து கள ஆய்வை தொடங்கினர். மத்திய குழுவின் தலைவரான கே.பி.சிங் தலைமையில் கே.பொன்னுச்சாமி, ராஜேஷ் திவாரி, தங்கமணி ஆகிய 4 பேர் ஒரு அணியாகவும், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் எஸ்.விஜயகுமார் தலைமையில் ரங்கநாத் ஆடம், கே.எம்.பாலாஜி ஆகிய 3 பேர் ஒரு அணியாகவும் சென்று ஆய்வு நடத்தினர்.

தூத்துக்குடி மாநகராட்சி கருத்தப்பாலம் பகுதியில் ஏற்பட்ட சேதம் தொடர்பாக வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். | படம்: என்.ராஜேஷ்

முதல் குழுவினர்: கே.பி.சிங் தலைமையிலான முதல் குழுவினர் மழை வெள்ளத்தால் சேதமடைந்த அந்தோணியார்புரம் தேசிய நெடுஞ்சாலை பாலம், முறப்பநாடு குடிநீரேற்று நிலையம், பேரூர் பகுதியில் சாலை, வேளாண் பயிர்கள், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை, தாமிபரணி ஆற்றின் கரை உடைப்பு, பொன்னன்குறிச்சியில் வீடுகள் சேதம், குடிநீர் பம்பிங் ஸ்டேசன், கடம்பாகுளம், ராஜபதி பகுதியில் சாலை, வேளாண் பயிர்கள், மின் கம்பங்கள், ஏரலில் சாலை, சிறு வியாபாரிகளுக்கு பாதிப்பு, தாலுகா அலுவலகம், தெற்கு வாழவல்லானில் மின் கோபுரங்கள் போன்ற 16 இடங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

2-வது குழுவினர்: இதேபோல் எஸ்.விஜயகுமார் தலைமையிலான 2-வது அணியினர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தூத்துக்குடி கருத்தபாலம், ஆதிபராசக்தி நகர், ஓம் சாந்தி நகர், மாப்பிளையூரணி, அத்திமரப்பட்டி உப்பாறு ஓடை உடைப்பு, பயிர் சேதம், சாலை சேதம், பழையகாயலில் சாலை, அகரத்தில் பயிர்கள் சேதம், ஆத்தூர் பாலம், புன்னக்காயலில் மீனவர்களுக்கான பாதிப்பு, மின் கம்பங்கள் சேதம், திருச்செந்தூர் ஆவுடையார்குளம், மெஞ்ஞானபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற 16 இடங்களில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அனைத்து இடங்களிலும் மழை வெள்ள சேதம் குறித்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவைகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். மேலும், அனைத்து இடங்களிலும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் சேதங்கள் குறித்து விரிவாக மத்திய குழுவினரிடம் எடுத்துக் கூறினார்கள். சில இடங்களிலும் பொதுமக்கள், விவசாயிகளும் மத்திய குழுவினரை சந்தித்து பாதிப்புகள் தொடர்பாக முறையிட்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய ஆய்வு மாலை வரை நீடித்தது. இந்த ஆய்வின் அடிப்படையில் மத்திய குழுவினர் தங்கள் சேத மதிப்பீட்டு அறிக்கையை மத்திய அரசிடம் விரைவில் சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE