“தமிழகத்தை விமர்சிக்க அண்ணாமலைக்கு தார்மிக உரிமை இல்லை” - அதிமுக

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: “பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு, மத்திய அரசு நிதி வழங்காமல் வஞ்சித்து வருகிறது” என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டினார். மேலும், “தமிழகத்தைப் பற்றி விமர்சனம் செய்ய அண்ணாமலைக்கு எவ்வித தார்மிக உரிமையும் இல்லை” என்று அவர் ஆவேசமாக கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே லக்கபத்தனப்பள்ளியில் புதிய திட்ட பணிகளை அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்து பேசியது: “காமராஜரை மோடியுடன் மட்டும் அல்லாமல், தற்கால தலைவர்கள் யாருடன் ஒப்பிட்டு பேச முடியாது. காமராஜர் மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்பணித்த கர்மவீரர், அவருடன் தற்போதைய தலைவர்களை ஒப்பிட்டு பேசுவது சரியாக இருக்காது.

பிரதமர் மோடி ‘ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என பேசுகிறார். ஆனால், தமிழகத்தில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் மோடி கலந்து கொண்டு, முதலீடு செய்யுங்கள், இது பாதுகாப்பான மாநிலம் என கூறியிருந்தால் பாஜக தலைவர் அண்ணாமலை கூறும் கருத்துகளை வரவேற்பேன். ஆனால் மோடி, குஜராத்துக்கு தொழில்முனைவோரை அழைத்து பேசுகிறார். தனது சொந்த மண்ணுக்காகச் சென்று, சிறிய வட்டத்துக்குள் சென்றுவிட்டார். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியை வழங்காமல் வஞ்சிக்கிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டை பற்றி விமர்சனம் செய்ய அண்ணாமலைக்கு எவ்வித தார்மிக உரிமையும் இல்லை. பாஜக ஆளும் மாநிலங்களைவிட தமிழகம், மக்கள் நல்வாழ்வு துறை, விவசாயம், கல்வி துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலம் என ஜெயலலிதா, பழனிசாமி ஆட்சிக் காலங்களில் மத்திய அரசே பாராட்டி விருதுகள் வழங்கி உள்ளது. இதனை மறைத்து அண்ணாமலை செல்லும் இடங்களில் தான்தோன்றி தனமாக பேசி விமர்சனம் செய்வது நாகரிகமான அரசியல் இல்லை.

அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு குறித்து அரசியல் பேசுவதை நாங்கள் விரும்பவில்லை. காங்கிரஸ் தேர்தலை முன்னிறுத்தி பாஜகவை எதிர்க்கும் வகையில் இது குறித்து பேசி வருகிறது. திமுக வாரிசு அரசியல் என்பது எல்லோருக்கும் தெரியும். உதயநிதி ஸ்டாலின் ஏற்கெனவே விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ளார். தற்போது அவர் துணை முதல்வர் ஆகலாம். அதன்பின்னர் முதல்வரின் உடல்நிலை, நிர்பந்தம் காரணமாக முதல்வராக கூட உதயநிதி ஸ்டாலின் ஆகலாம். எது நடந்தாலும், 2026-ம் ஆண்டு தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக மக்கள் அமர்த்துவர்கள்.

நீண்ட காலமாக திமுகவில் இருந்தவர்கள் அதிமுகவில் இணைகிறார்கள் என்றால் திமுக மீது வைத்து இருந்த நம்பிக்கை இழந்துவிட்டார்கள். திமுகவில் அவர்களுக்கு உரிய வாய்ப்பும், மரியாதையும் கிடைக்கவில்லை என்பதாலும் அதிமுகவுக்கு விரும்பி வருகின்றனர். அதிமுகவில் இணைந்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து எங்களது கட்சியின் பொதுச் செயலாளர் முடிவு செய்வார்.

அதிமுகவில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் கருணையால் அமைச்சராகவும், முதல்வராக இருந்தார். அதிமுக நலனில் அக்கறை இல்லாமல் சுய லாபத்துக்கு செயல்பட்டதால் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். ஓபிஎஸ் எதிரிகளுடன் சேர்ந்து அதிமுக சக்தியை வலுவிழக்க முயற்சி செய்கிறார். இதன் மூலம் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்கிறார். ஓபிஎஸ் நீதிமன்றம் செல்லும்போது எல்லாம் அவர் செய்யும் தவறுக்காக நீதிமன்றம் கொட்டு வைக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE