“எனக்கு உடல்நிலை சரியில்லையா... சிரிப்பு தான் வந்தது” - அயலக தமிழர் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

By செய்திப்பிரிவு

சென்னை: "எந்தச் சூழலிலும் மக்களோடு இருப்பவன் நான். எனது சக்தியை மீறி உழைப்பவன் நான்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை 3-ம் ஆண்டாக ‘தமிழ் வெல்லும்’ என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு மாபெரும் அயலகத் தமிழர் தின விழாவை சென்னையில் நடத்துகிறது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்றும் இன்றும் (ஜன.11, 12) நடைபெறுகிறது. இந்த விழாவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இன்றைய நிகழ்ச்சியில் அயலகத் தமிழர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார் முதல்வர் ஸ்டாலின். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "எனக்கு உடல் நலமில்லை, உற்சாகமில்லை என்று நேற்று ஒரு பத்திரிகையில் எழுந்தியிருந்தார்கள். அதை படித்தபோது எனக்கு சிரிப்புதான் வந்தது. தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கும்போது அதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு. அதைவிட எனக்கு வேறு என்ன குறை இருக்க போகிறது. நேற்று ஒரு பெண்மணி மகளிர் உதவித்தொகை, பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணத் தொகை என ஒரு மாதத்தில் ரூ.8 ஆயிரம் அரசு கொடுத்ததை சந்தோஷமாக கூறினார். அவர் முகத்தில் பார்க்கின்ற மகிழ்ச்சி தான் எனக்கான உற்சாகம். எனக்கு மக்களை பற்றிதான் எப்போதும் நினைப்பே தவிர, என்னைப் பற்றி இருந்ததில்லை. எந்த சூழலிலும் மக்களோடு இருப்பவன் நான். எனது சக்தியை மீறி உழைப்பவன் நான். எனவே இதுபோன்ற செய்திகளை ஒதுக்கிவிட்டு மக்களுக்காக உழைப்பேன்.

உலகத்தை வளப்படுத்த தமிழர்கள் சென்ற மாநாடு இது. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற உழைப்புத் திறன் தான் கடல் கடந்தும் தமிழர்கள் வெற்றிகரமாக வாழக் காரணம். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் நலுனுக்காக வெளிநாடு வாழ் தமிழர் நலப்பிரிவு உருவாக்கி அரசாணை வெளியிட்டு வாரியம் அமைக்கவும் சட்ட முன்வடிவு உருவாக்கப்பட்டது முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஆனால் தொடர்ந்து வந்த ஆட்சி மாற்றம் காரணமாக அந்த முயற்சி தடைபட்டது. ஆனால், தற்போது திராவிட மாடல் அரசு தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, அயலக தமிழர் நலனுக்காக ஒரு துறையை உருவாக்கி, தனி அமைச்சரை நியமித்து குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல், அயலக தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாரியமும் துறையும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் இணைய கல்வி கழகம் மூலம் தமிழ் கற்றுத் தரப்படுகிறது. வெளிநாடுகளில் கைது செய்யப்படுகிற சூழலுக்கு ஆளாகிற தமிழர்களுக்கு உரிய சட்ட உதவிகள் தரப்படுகிறது. மேலும் வெளிநாடுகளில் உதவி தேவைப்படும் தமிழர்களுக்கு ஒன்றிய அரசுடன் இணைந்து உரிய நிவாரணங்களை இந்த துறை கொடுத்து வருகிறது. மருத்துவ இயலாமை மற்றும் பல காரணங்களால் தாயகம் திரும்ப இயலாத தமிழர்களை, தாய் நாட்டுக்கு அழைத்து வரவும், அங்கு இறக்க நேரிடும் தமிழர்களின் உடலை இந்தியா கொண்டுவரவும் ரூ.1 கோடி வரை சுழல்நிதி தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முகவர் மீதான புகார் போன்ற வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அளித்த புகாரில் 53 புகார்கள் தீர்வு காணப்பட்டுள்ளன. வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு இங்கு இருக்கும் நிலம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சரிசெய்ய டிஜிபி தலைமையில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைன், சூடான், கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் இப்படி பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், பல்வேறு பிரச்சினைகள் சிக்குகின்றபோது தமிழக அரசு விரைவாக செயல்பட்டு அவர்களை பத்திரமாக தாய்நாட்டு அழைத்து வந்துள்ளது. வெளிநாடு மட்டுமின்றி, இந்தியாவின் பல மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள், இயற்கை பேரிடர்களில் சிக்கியபோதும் தமிழர்களை மீட்கும் நடவடிக்கைகளில் இந்த அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழகத்தில் தாங்கள் பிறந்த கிராமத்தை மேம்படுத்த ‘எனது கிராமம்’ என்னும் முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தங்களது சேமிப்பை தமிழகத்தில் பாதுகாப்பாக முதலீடு செய்ய ஆர்வத்தோடு இருக்கிறார்கள். இதற்காக புரிந்துணர்வு போடப்பட்டு அரசு மற்றும் தொழில்நிறுவனங்களில் வெளிநாடு வாழ் தமிழர்கள் முதலீடு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 'வேர்களை தேடி' என்பது இந்தாண்டுக்கான முத்தாய்ப்பு திட்டமாக அமைந்துள்ளது. இதுபோன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தின் முதல்வராக மட்டுமில்லாமல், ஒரு தமிழனாக இதை பார்த்து அகம் மகிழ்கிறேன்.

நீராலும், நிலத்தாலும், நாடுகளாலும், கண்டங்களாலும் நாம் பிரிந்து இருந்தாலும் நாம் எல்லோரும் ஒரே நிலத்தைச் சார்ந்தவர்கள். தமிழ் அன்னையின் குழந்தைகள். எங்கு வாழ்ந்தாலும் தாய் தமிழ்நாட்டை மறக்காதீர்கள். தமிழ்நாட்டு வாருங்கள். தமிழோடு இணைந்திருங்கள். எங்கு வாழ்ந்தாலும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு துணையாக இருந்திடுங்கள்" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE