ஜல்லிக்கட்டு வசூலில் முறைகேடு செய்தால் குற்றவியல் நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

By கி.மகாராஜன் 


மதுரை: ஜல்லிக்கட்டு வசூலில் முறைகேடு நடைபெற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களையும், காளைகளையும் ஊக்குவிக்கும் விதமாக கார், இருசக்கர வாகனங்கள், தங்ககாசு, வீட்டு உபயோக பொருட்கள் உட்பட பல்வேறு விதமான பரிசுகள் வழங்கப்படும்.

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்குவதில் ஜல்லிக்கட்டு குழுவினர் முறைகேடுகளை செய்கின்றனர். கடந்தாண்டு ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முதல் பரிசு கார் வழங்கியதில் சர்ச்சை ஏற்பட்டது. அதிக மாடுகளை பிடித்து வீரருக்கு பதில் அவரை விட குறைந்தளவு மாடுகளை பிடித்தவருக்கு கார் பரிசு வழங்கப்பட்டது. இந்த விவகாரம் உயர் நீதிமன்றம் வரை சென்றது.

இதேபோல் தங்க காசு வழங்குவதிலும் பல்வேறு குளறுபடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விழா பெயரில் பரிசுப் பொருட்கள், நேரடி ஒளிபரப்பு என பல்வேறு வகையில் கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. இந்த வசூலுக்கு உரிய ஆவணங்கள் இல்லை. வரவு, செலவு கணக்கும் இல்லை. ஜல்லிக்கட்டு விழாக்களுக்கு அரசு தரப்பில் செலவு செய்யப்படுகிறது. போலீஸ் பாதுகாப்புக்கு நியமிக்கப்படும் போலீஸாருக்கு கூட பாதுகாப்பு செலவு விழாக்குழுவிடம் வசூலிப்பது இல்லை. இருப்பினும் பல கோடி ரூபாய் வசூல் குறித்து வருவாய்த்துறை கணக்கு கேட்பதில்லை.

எனவே, ஜல்லிக்கட்டு விழாவுக்கான அனைத்து நிதி வசூல் குறித்து வருவாய்த்துறையிடம் கணக்கு தாக்கல் செய்யவும், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளை ஓய்வு பெற்ற நீதிபதிகள் மேற்பார்வையில் நேர்மையாக நடத்தவும் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் கே.நீலமேகம், தேவராஜ் மகேஷ் வாதிட்டனர்.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை ஜல்லிக்கட்டு குழு நடத்துகிறது. மாவட்ட நிர்வாகம் கண்காணிக்கிறது. தனி நபர்கள் பரிசுப் பொருட்களை வழங்குகின்றனர். ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் யாரிடமும் ரொக்கப்பணம் வசூலிப்பது இல்லை. ஜல்லிக்கட்டு வசூலில் முறைகேடுகள் நடைபெற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ஜல்லிக்கட்டு விழாக்குழுவினரின் வசூல் நடவடிக்கை கண்காணிக்கப்படுவதாகவும், யாரிடமும் ரொக்கமாக நன்கொடை வசூலிக்கப்படுவதில்லை, வசூல் முறைகேடு புகார் வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் மனு மீது புதிதாக உத்தரவும் பிறப்பிக்க வேண்டியதில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்