அண்ணாமலை காவடி ஆட்டம்: பாஜக தொண்டர்கள் உற்சாகம் @ கிருஷ்ணகிரி

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்/கிருஷ்ணகிரி: ராயக்கோட்டையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காவடி எடுத்து ஆடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், ராயக்கோட்டை., தளி, ஓசூர் ஆகிய பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை "என் மண், என் மக்கள்" யாத்திரை மேற்கொண்டார். இதில் இன்று மதியம் ராயக்கோட்டைக்கு வந்த அண்ணாமலைக்கு மேள தாளங்கள் முழங்க காவடி ஆட்டம் ஆடி வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது அண்ணாமலை காவடி ஆடியவர்களிடம் காவடியை வாங்கி அவரும் அவர்களுடன் சேர்ந்து ஆடினார். அப்போது அங்கிருந்த தொண்டர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். பின்னர் அவர் நடந்து வந்த ராயக்கோட்டை ரவுண்டான பகுதியில் தேமுதிகவினர் வைத்திருந்த மறைந்த விஜயகாந்த் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதன் பின்னர் அவர் பேசும்போது, "மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தவர்தான் பாரத பிரதமர் நரேந்திர மோடி. அவர் 2 முறை பிரதமராகி பல்வேறு சாதனை புரிந்துள்ளதால், ஊழல் இல்லாத மோடி ஆட்சியில், உலக நாடுகள் இந்தியாவை திரும்பிப் பார்க்கும் அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. பழைய கொள்கை மொழி என்பது கட்டாயம் இந்தி மற்றும் தாய் மொழியை கட்டாயம் படிக்க வேண்டும். ஆனால், பிரதமர் முதன்முதலில் மும்மொழி கொள்கையின்படி தாய்மொழி தமிழில் படியுங்கள், 2-வது ஆங்கிலம் படியுங்கள் 3-வதாக அவர்களது விருப்பபடி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழியை தேர்வு செய்து படிக்க வேண்டும். இந்தியை படியுங்கள் என நாங்கள் கட்டாயம் படுத்தவில்லை, இதனை திராவிட கொள்கையாளர்கள் எதிர்க்கிறார்கள்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் அந்தந்த பகுதிகளில் அதிகம் மொழி பேசும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும். பாஜக அரசு பெண்களை மையப்படுத்திதான் ஆட்சி நடத்துகிறது. அவர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெற்று மீண்டும் 3-வது முறையாக மோடி பிரதமராக உள்ளார்" என பேசினார். இதில் மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

பர்கூரில் பேசும் போது, "மத்திய அமைச்சர்கள் மீது குண்டு ஊசி வழக்குகள்கூட கிடையாது. ஆனால், தமிழகத்தில் உள்ள 35 அமைச்சர்களில் 11 அமைச்சர்கள் மீது நீதிமன்றங்களில் ஊழல் வழக்குகள் நடைபெற்று வருகிறது. தற்போது ஊழல் வழக்கில் பொன்முடிக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டு அமைச்சர், எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்வதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் சிறைக்கு செல்வார். உழைத்தால் தான் ஊதியம் கிடைக்கும். ஆனால், ஊழல் வழக்கில் 6 மாதமாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, எவ்வித மக்கள் பணிகளும் செய்யாமல், இலாகா இல்லாத அமைச்சராக மாதம் ரூ.1.05 லட்சம் ஊதியம் பெறுகிறார்.

2016-ம் ஆண்டு நீட்தேர்வு வந்த பிறகு ஏழை, விவசாய குடும்பத்தில் இருந்து மாணவர்கள் பலர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். நீட் தேர்வு சிறந்த தேர்வாகும். திமுக நீட்டுக்கு எதிராக மாணவர்களை திசை திருப்பி, அவர்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக மாற்றுக்கின்றனர்.

1967-ம் ஆண்டு முதல் 5 முறை தமிழகத்தை ஆட்சி செய்த திமுக 5 அரசு மருத்துவக் கல்லூரிகள், 15 தனியார் மருத்துவ கல்லூரிகளை தொடங்கியது. ஆனால் 9 ஆண்டு கால மோடி ஆட்சியில் தமிழகத்தில் 15 அரசு மருத்துவ க்கல்லூரிகள் தொடங்கப்பட்டு 2,250 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிதியை பெருக்குவதற்காகதான் நீட்டை திமுக எதிர்க்கிறது.

டெட் தேர்வை எழுதிவிட்டு ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் என தமிழகத்தில் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தபின்பு 6 ஆயிரம் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதில், சென்னையில் மட்டும் 800 அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. அரசு பேருந்துகளின் நிலைமையும் மோசமாக உள்ளது. காமராஜர் ஆட்சிக்காலத்தில் 18 ஆயிரம் பள்ளிக்கூடங்களை கட்டினார். திமுக ஆட்சியில் அரசு பள்ளிகளில் 13 ஆயிரம் வகுப்பறைகள் கட்டிடங்கள் இல்லாமல், ஒரே வகுப்பறையில் 1ம், 2ம் வகுப்பு மாணவர்கள் கல்வி கற்க வேண்டி நிலை உள்ளது.

தமிழகத்தின் மொத்த கடன் ரூ.8.23 லட்சம் கோடியாக உள்ளது. ஒவ்வொரு ஒரு ரேஷன் அட்டை மீதும் ரூ.3.61 லட்சம் கடன் உள்ளது. திமுகவை பொறுத்தவரை ஒத்தையாக கொடுத்துவிட்டு கத்தையாக எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். மகளிருக்கு உரிமைத் தொகை ரூ.1000 கொடுத்துவிட்டு, 20 சதவீதம் மின்கட்டணம், 30 சதவீதம் சொத்துவரி, பால், தயிர் விலைகளை உயர்த்திவிட்டனர். அப்படி என்றால், மகளிருக்கு உரிமைத்தொகை மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

திமுக என்னும் நாற்காலி, சாதி அரசியல், ஊழல், குடும்பம், அடாவடிதனம் என்னும் 4 கால்களுடன் உள்ளது. தமிழை வளர்ப்பதாக கூறி திமுக பித்தலாட்டம் செய்கிறது.கடந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 55 ஆயிரம் மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. ஆனால், மோடி தமிழின் பெருமையை உலக அரங்குக்கு எடுத்து சென்றுள்ளார். திருக்குறள் பெருமையை பேசுகிறார்" என்று அண்ணாமலை பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்