செந்தில் பாலாஜியின் சகோதரர் புதிதாக கட்டி வரும் பங்களாவில் வருமான வரித் துறை 2-வது நாளாக ஆய்வு

By ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டிவரும் பங்களாவில் வருமான வரித் துறை மதிப்பீட்டுப் பிரிவு அதிகாரிகள் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீடு, புதிதாக அவர் கட்டி வரும் பங்களா, அமைச்சரின் ஆதரவாளர்கள், அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் கடந்த மே மாதம் 26-ம் முதல் தொடங்கி அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கொங்கு மெஸ் உள்ளிட்ட சில இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு பின்னர் அகற்றப்பட்டன.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது நாளை (ஜன.12) தீர்ப்பு வழங்கப்படும் நிலையில், அவரது ஆதரவாளரான மணிக்கு சொந்தமான உணவகம், அதன் அருகே கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடம், கரூர் அருகே வால்காட்டுபுதூரில் உள்ள மணிக்கு சொந்தமான பண்ணை இல்லம், கரூர் நாமக்கல் புறவழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டி வரும் பங்களாவில் வருமான வரித் துறை மதிப்பீட்டுப் பிரிவினர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். மேலும், அந்த இடத்தின் மதிப்பு குறித்த ஆவணங்கள் தொடர்பாக மேலக்கரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டி வரும் பங்களாவில் வருமான வரித் துறை மதிப்பீட்டுப் பிரிவினர் 9 பேர் 2-வது நாளாக இன்று (ஜன.11) ஆய்வு மேற்கொண்டனர். இதில் இடத்தின் மதிப்பு, புதிய கட்டிடத்தின் மதிப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. காலை 8 மணிக்கு தொடங்கிய ஆய்வு, முற்பகல் 11.30 மணிக்கு முடிவுற்றது. அதன்பிறகு வருமான வரித்துறை மதிப்பீட்டுப் பிரிவினர் அவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு கிளம்பிச் சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE