அதிமுகவில் முதற்கட்ட வேட்பாளர்கள் மறைமுகமாக தேர்வா? - இபிஎஸ் மறுப்பு

By செய்திப்பிரிவு

சேலம்: "யார், யாருக்கெல்லாம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் இருக்கிறதோ, அவர்கள் எல்லாம் முறையான தலைமைக் கழக அறிவிப்புக்குப் பின்னர், அங்கு வழங்கப்படும் படிவங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின்னர், மூத்த தலைமைக் கழக நிர்வாகிகள், கலந்தாலோசித்து யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ, அவர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படும்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், அதிமுகவில் முதற்கட்டமாக 20 வேட்பாளர்களை அறிவித்து மறைமுகமாக களப்பணியாற்ற உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "ஊடகங்களில் வெளியாகும் செய்திகளுக்கு நாங்கள் பொறுப்பாளி அல்ல. வேட்பாளர் தேர்வு எதுவும் நடைபெறவில்லை.

யார், யாருக்கெல்லாம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் இருக்கிறதோ, அவர்கள் எல்லாம் முறையான தலைமைக் கழக அறிவிப்புக்குப் பின்னர், அங்கு வழங்கப்படும் படிவங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின்னர், மூத்த தலைமைக்கழக நிர்வாகிகள், கலந்தாலோசித்து யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ, அவர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படும்" என்றார்.

அப்போது வெள்ள பாதிப்புகளை திமுக கையாண்ட விதம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்த அரசாங்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவ்வப்போது, ஊடகங்களும் பத்திரிகைகளும் காட்டி வருகின்றன. மிக்ஜாம் புயல் சென்னையில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. அந்தp புயலின்போது, அதிகமான காற்றும் இல்லை. அதிகமான மரங்களோ, மின்கம்பங்களோ சாயந்துபோகவும் இல்லை. கனமழையால் தண்ணீர் தேங்கியதால், ஆங்காங்கே மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, பொறுப்பற்ற முறையில் முதல்வரும், அமைச்சர்களும் பத்திரிகை மற்றும் ஊடகங்களின் வழியே பேட்டி கொடுத்தனர். சென்னை மாநகரத்தில் எவ்வளவு மழை பெய்தாலும், ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காத வகையில் வடிகால் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்ற தவறான, பொய்யான செய்திகளை வெளியிட்டனர். மக்களும் அதனை நம்பிவிட்டனர்.

அந்த செய்தியை மக்கள் நம்பியதால், கனமழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏற்கெனவே, சென்னை மாநகரத்தில், வடிகால் பணிகள் முழுமையாக செய்து முடிக்கப்பட்டுவிட்டதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர், மற்ற அமைச்சர்கள் மற்றும் முதல்வரும் கூறினார்கள். ஆனால், கனமழையால் தண்ணீர் தேங்கியதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டதுடன், அவர்களது வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் கடுமையாக சேதமடைந்துவிட்டன.

2-3 நாட்களுக்கு மக்களுக்கு உணவுகூட கிடைக்காத நிலையை தொலைக்காட்சியில் பார்த்தேன். உண்மைநிலை இவ்வாறு இருக்க, இந்த திமுக அரசு பொய்யான ஒரு செய்தியை வெளியிட்டு மக்களை ஏமாற்றி வருகிறது. மிக்ஜாம் புயலின் காரணமாக, டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் மழை பெய்தது. அதை ஒரு பாடமாக அரசு எடுத்துக்கொண்டிருக்க வேண்டும்.

தென்மாவட்டங்களில் கனழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெளிவாக கூறியிருக்கிறது. நெல்லை, குமரி, தூத்துக்குடி, மற்றும் தென்காசியில் அதிகனமழை பெய்யும் என்று ஒரு வாரத்துக்கு முன்பாகவே செய்திகளும் வெளிவந்துள்ளன. திறமையற்ற முதல்வர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால், அம்மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அரசு மேற்கொண்டிருந்தால், இந்த அரசாங்கம் மக்களின் கோபத்துக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE