பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் பிப்.16-ல் வேலைநிறுத்தம்: எஸ்ஆர்எம்யு அறிவிப்பு

By ஜி.செல்லமுத்து

திருச்சி: பழைய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு ஏற்காவிட்டால் வரும் பிப்ரவரி 16-ம் தேதி மத்திய தொழிற்சங்கங்களை ஒன்றிணைந்து நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என எஸ்ஆர்எம்யு தென் மண்டல தலைவர் ராஜா ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், தனியார் மயமாக்கலை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு எஸ்ஆர்எம்யு சார்பில் இன்று 4 -வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தினை எஸ்ஆர்எம்யு தென் மண்டல தலைவர் ராஜா சேகர் வாழ்த்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மத்திய அரசு செவி சாய்க்காது என்றாலும் அடுத்த கட்ட போராட்டத்துக்கான முன்னோட்டம் என்பதை உணர்த்தவே இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும். குறைந்த ஓய்வூதியத்தை அதிகப்படுத்தி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். நாடு முழுவதும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 30 லட்சம் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வரும் பிப்ரவரி 16-ம் தேதி மத்திய தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE