சேலம் | ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - பெரியார் பல்கலை.,யில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

By வி.சீனிவாசன்

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வருகை தரும் தமிழக ஆளுநரை கண்டித்து பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சித்ததால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடு புகாரில் துணைவேந்தர் ஜெகநாதன் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு விமானம் மூலம் இன்று மதியம் தமிழக ஆளுநர் ரவி வருகை தர உள்ளார். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுடன் ஆளுநர் ரவி சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இதனிடையே, ஆளுநர் ரவி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் மற்றும் பல்வேறு கட்சியினர் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதனால் பெரியார் பல்கலைக்கழகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .

திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட பல்கலைக்கழகம் முன் திரண்டுள்ளனர். இதையடுத்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி தலைமையில் பல்கலைக்கழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நிதித்துறை கூடுதல் செயலர் அருண் பிரசாத் தயாள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE