பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக சின்னமனூரில் கரும்பு அறுவடை மும்முரம்

By என்.கணேஷ்ராஜ்

சின்னமனூர்: பொங்கல் பரிசுத் தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக சின்னமனூர் பகுதியில் கரும்புகள் தற்போது மும்முரமாக அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.

பொங்கலுக்கு கரும்புகளின் தேவை அதிகம் இருக்கும் என்பதால் இதை கணக்கிட்டு தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கரும்புகள் பயிரிடப்பட்டு வருகின்றன. மேலும் ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு முழுக் கரும்பு வழங்குவதால் நிலையான வருவாய் கருதி பலரும் இந்த விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்படி பெரியகுளத்தில் 43.95ஏக்கர் அளவிலும், தேனியில் 5.90ஏக்கரிலும், சின்னமனூரில் 56.17ஏக்கர் என்று மாவட்டத்தில் மொத்தம் 106ஏக்கர் பரப்பளவில் பன்னீர் கரும்புகள் விளைவிக்கப்படுகின்றன.

இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் இதன் பரப்பளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த மாதமே இக்கரும்புகள் அறுவடை பருவத்தை எட்டின. சில்லறை விற்பனை, கிறிஸ்துமஸ், புத்தாண்டுபோன்றவற்றுக்காக சிறிய அளவில் அறுவடை நடைபெற்றது. இப்பகுதி கரும்புகள் திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி, சங்கரன்கோயில் மற்றும் கேரளா மாநிலத்துக்கும் அதிகளவில் அனுப்பப்படுகின்றன.

சின்னமனூர் புறவழிச்சாலையில் அறுவடை செய்த கரும்புகளை லாரிகளில் ஏற்றும் தொழிலாளர்கள்

பொங்கல் பண்டிகை நெருங்கியதைத் தொடர்ந்து தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளது. இதில் முழுக்கரும்பும் இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து கூட்டுறவு சங்கங்கள் இவற்றை கொள்முதல் செய்யத் தொடங்கி உள்ளன. இதனால் சின்னமனூர், தேவதானப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலும் அறுவடைப் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தோட்டத்தில் வெட்டப்படும் கரும்புகள் உடனுக்குடன் லாரிகள் ஏற்பட்டு பின்பு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "தற்போது கரும்புகள் மகசூலுக்கு வந்துள்ளதால் மகிழ்ச்சியாக உள்ளது. குறிப்பாக கூட்டுறவு மூலம் மொத்தமாக கொள்முதல் செய்வதால் எங்களின் விற்பனையும் எளிதாக உள்ளது. ஒரு கரும்புக்கு தமிழக அரசு ரூ.33நிர்ணயித்துள்ளது. ஆனால் கூட்டுறவு சங்கங்களோ ரூ.22தான் தருவதாக கூறியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற நிலை தொடர்கிறது. 10மாதம் பாடுபட்டு வியர்வை சிந்தி நாங்கள் உழைக்க அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் எங்கள் லாபத்தை தட்டிப்பறிக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். இதற்காகவே சில விவசாயிகள் கேரள உள்ளிட்ட வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE