சென்னை: முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரில் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணையை நடத்த தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’யின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகார் மீதான விசாரணைக்கு அனுப்பபட்ட நோட்டீஸை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் எஸ்சி, எஸ்டி ஆணையம் விசாரிக்க முடியாது எனக் கூறி முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, முரசொலி அறக்கட்டளை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், "பஞ்சமி நிலம் அல்ல என அரசு அறிக்கை அளித்துள்ளது. இதனால், புகாரை முடிக்க முடிவெடுத்துள்ளதாக ஆணையம் கூறியது. ஆனால், திடீரென புகார் நிலுவையில் உள்ளதாக கூறுகின்றனர். பஞ்சமி நிலம் என்பதற்கான ஆதாரங்களை புகார்தாரர் சமர்ப்பிக்கவில்லை.
அரசியல் காரணத்துக்காக தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் இந்தப் புகாரை நிலுவையில் வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆணையம் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது. தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. பஞ்சமி நிலமா, இல்லையா என வருவாய்த் துறை தான் விசாரிக்க முடியுமே தவிர, தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் தலையிட முடியாது" என்று வாதிட்டிருந்தார்.
அப்போது தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், "பட்டா மற்றும் விற்பனை பத்திரம் ஆகியவை உரிமையாளரை முடிவு செய்வதற்கான இறுதியான ஆதாரம் அல்ல. ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கக் கூடாது. விசாரணையை தொடர அனுமதிக்க வேண்டும்" என்று வாதிட்டிருந்தார்.
அப்போது புகார்தாரர் சீனிவாசன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி, "வழக்கு நிலுவையில் இருந்தபோது பட்டா வழங்கப்பட்டது. எனவே, ஆணையம் விசாரணை செய்வது சரியானதுதான்.வில்லங்கத் சான்றிதழில் 1974-ல் மாதவன் நாயர் பெயரோ, அஞ்சுகம் பதிப்பகத்தின் பெயரோ இல்லை" என வாதிட்டிருந்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் இன்று தீர்ப்பளித்தார். அதில், அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களுக்கும், வருவாய் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களுக்கும் முரண்பாடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை செய்ய முடியாது.
பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலம் சட்டவிரோதமாக வேறு நபர்களுக்கு மாற்றபட்டது தொடர்பான உண்மையை கண்டறிய தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் விசாரணை நடத்த வேண்டியது அவசியம். ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த எல்.முருகன் தற்போது மத்திய இணை அமைச்சராக இருப்பதால், அவர் அனுப்பிய நோட்டீஸ் பொருத்தமற்றதாகிவிட்டது.
எனவே, விதிகளின்படி புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பளித்து, விசாரணை நடத்தி, உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணைக்கு தடை கோரி தாக்கல் செய்யபட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago