கட்சியின் கொள்கைக்கு எதிராக பேசியதாக கார்த்தி சிதம்பரத்துக்கு காங்கிரஸ் நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: காங்கிரஸ் கட்சி கொள்கைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி கார்த்தி சிதம்பரத்திடம் விளக்கம் கேட்டு தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மகனும், சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர். அவரது கருத்துகள் பல்வேறு நேரங்களில் சர்ச்சைக்குள்ளாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு, நரேந்திர மோடிக்கு நிகரான தலைவராக ராகுல் காந்தியை கருத முடியாது என்று அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து மற்றொரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என்று கருத்து தெரிவித்திருந்தார்.

பாஜக பல மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்துதான் வெற்றி பெற்று வருவதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறிவரும் நிலையில், அதற்கு முற்றிலும் முரணாக கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்து இருப்பது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாக, கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வருவதாகக் கூறி தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சார்பில் விளக்கம் கேட்டு கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ் கிடைத்த 10 நாட்களில் விளக்கம் அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தலைவர் பதவிக்கு கோரிக்கை: இளம் தலைமுறையினரிடம் கட்சியை வழங்குமாறும், தன்னை கட்சியின் மாநில தலைவராக நியமிக்குமாறும், பலம்மிக்க கட்சியாக மாற்றிக் காட்டுவதாகவும் பலமுறை காங்கிரஸ் தலைமையிடம் கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்திடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு நோட்டீஸ் அனுப்பி இருப்பது கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திடம் கேட்டபோது, “எனக்கு நோட்டீஸ் எதுவும் வரவில்லை” என்றார். மேலும், “எனக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தமிழக காங்கிரசுக்கு அதிகாரம் இருக்கிறதா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE