கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: எஸ்ஆர்எம்யு பொதுச் செயலாளர் கண்ணையா அறிவிப்பு

By செய்திப்பிரிவு

திருச்சி: ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பொது வேலைநிறுத்தம் நடைபெறும் என்று எஸ்ஆர்எம்யு பொதுச் செயலாளர் கண்ணையா கூறினார்.

தெற்கு ரயில்வே தொழிலாளர் சங்கம் (எஸ்ஆர்எம்யு) சார்பில், ‘புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ரயில்கள் மற்றும்ரயில் நிலையங்களை தனியார்மயமாக்கக் கூடாது’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகம் முன்பு 4 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 2-வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் எஸ்ஆர்எம்யு பொதுச் செயலாளர் என்.கண்ணையா, மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.வீரசேகரன் உட்பட 500-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். பின்னர் என்.கண்ணையா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தப் போராட்டம் எவ்வித அரசியல் நோக்கத்துக்காகவும் நடத்தப்படவில்லை. மத்திய அரசுஊழியர்களுக்காகவும், மக்களுக்காகவுமே நடத்தப்படுகிறது. டெல்லியில் கடந்த நவம்பர் மாதம்நடைபெற்ற நிர்வாக இணைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில், தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்க தனி குழு அமைக்கப்பட்டது. ஆனால், அதில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

பழைய ஓய்வூதியத் திட்டத்தில்ரயில் ஓட்டுநருக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.35,000 கிடைக்கும். ஆனால் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ரூ.1,750 முதல் ரூ.3,800 வரைமட்டுமே கிடைக்கிறது.மத்தியஅரசின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில் இந்த 4 நாட்கள் போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது. எங்கள் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு உரிய தீர்வு காணவில்லை என்றால், பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE