மதுரை: மதுரை, விருதுநகர், திண்டுக்கல் - தேனி மாவட்டங்கள் அடங்கிய மதுரை அரசு போக்குவரத்து கழக கோட்டத்தில் 98 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன. சாலை மறியலில் ஈடுபட்ட 30 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 96 மாதங்களாக வழங்கப்படாத பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், வாரிசு வேலை வழங்க வேண்டும், ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
பொங்கலுக்கு பிறகு கோரிக்கையை நிறைவேற்றுவதாக அரசு தெரிவித்திருப்பதை ஏற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொமுச, ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தினர் பங்கேற்கவில்லை. சிஐடியு, ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் நலச்சங்கம், ஏஐடியூசி, டிடிஎஸ்எப், அரசு விரைவு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி, திராவிட தொழிலாளர் சங்கம், அண்ணா தொழிற் சங்கம், எஸ்சிடியூ, பிஎம்எஸ் உள்ளிட்டு பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலை நிறுத்தப் போராட்டம் காரணமக மதுரையில் அனைத்து பணிமனைகளிலும் இன்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மதுரை மாவட்டத்தில் புதூர், எல்லீஸ்நகர், பொன்மேனி, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர் உள்ளிட்ட 16 பணிமனைகளில் இருந்து மொத்தம் 600 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
» பேருந்து ஸ்டிரைக் நிலவரம் முதல் அண்ணாமலை கேள்வி வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.9, 2024
» சவுதி அரேபியாவில் ஹஜ், உம்ரா மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, முரளீதரன் பங்கேற்பு
இதில் 93 சதவீத பேருந்துகள் இன்று இயக்கப்பட்டன. பேருந்து நிலையங்கள் வழக்கம் போல் பரபரப்பாக இயங்கியது. பொதுமக்கள் வழக்கம்போல் பேருந்துகளில் பயணம் செய்தனர். பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். இருப்பினும் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் நிலைமையை சமாளிக்க 100 தற்காலிக ஓட்டுனர்கள், நடத்துனர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட மதுரை, விருதுநகர், திண்டுக்கல்-தேனி மண்டலங்களில் மதுரை மண்டலத்தில் 950 பேருந்துகளில் 935 பேருந்துகளும், திண்டுக்கல் மண்டலத்தில் 789 பேருந்துகளில் 785 பேருந்துகளும், விருதுநகர் மண்டலத்தில் 418 பேருந்துகளில் 414 பேருந்துகளும் இயக்கப்பட்டன. 3 மண்டலங்களும் சேர்ந்து மொத்தமுள்ள 2166 பேருந்துகளில் 2134 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. 98.52 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டதாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம்: அரசு விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து பணிமனை முன்பு கிளைச் செயலாளர் நாகராஜன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநில உதவித் தலைவர் மகாலிங்கம், கிளைத் தலைவர் மணிக்கம், பொருளாளர் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
மதுரை நகர் கிளை, பொன்மேனி மற்றும் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு சார்பில் தலைவர் அழகர்சாமி, பொதுச்செயலாளர் கனகசுந்தர், அரசு போக்குவரத்து கழக சிஐடியு ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் நலச்சங்கம் மாவட்டத் தலைவர் எஸ்.அழகர், பொதுச் செயலாளர் ஆர்.வாசுதேவன், பொருளாளர் எஸ்.ரவி, ஏஐடியூசி சங்க பொதுச் செயலாளர் எம்.நந்தசிங், டிடிஎஸ்எப் நிர்வாகிகள் திருமலைச்சாமி, செண்பகம், எச்எம்எஸ் நிர்வாகி ஷாஜகான், டிஏ மீட்புக்குழு நிர்வாகி கதிரேசன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள். ஜெயராஜ், ஜெயபாலன், எஸ்சிடியூ நிர்வாகி. முகம்மது தாவூத், எல்எல்எப் மாநில இணை பொதுச் செயலாளர் எஸ்.மகபூப்ஜான், மாவட்ட நிர்வாகி முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை பணியாளர் சம்மேளனம் அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் நாளை காலை ஓய்வு பெற்ற தொழிலாளர்களை திரட்டி மதுரை கோட்ட தலைமையகம் முன்பாக மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
போக்குவரத்து தொழிற்சங்க கூட்டுக்குழு நிர்வாகி வாசுதேவன் கூறுகையில், வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. 60 சதவீத பேருந்துகள் தான் இயங்கியது. ஆனால் 98 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டதாக அரசு சார்பில் விளம்பரம் செய்யப்படுகிறது. இன்று காலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
இதனிடையே, போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் சூழலில், கோவையில் இன்று அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. பிற்பகலுக்குப் பின்னர் தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் 40 பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன் விவரம் > கோவையில் அரசுப் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின: தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் 40 பேருந்துகள் இயக்கம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago