பொங்கல் பரிசுக்காக கொள்முதல் செய்த கரும்புகளை எடுத்துச் செல்லாததால் விவசாயிகள் சாலை மறியல் @ மேட்டூர்

By த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அருகே கொள்முதல் செய்து லாரிகளில் ஏற்றப்பட்ட கரும்பை அதிகாரிகள் எடுத்து செல்லாததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேட்டூர் அருகே கோல்நாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டியூர், பொறையூர், வாச்சம்பள்ளி உள்ளிட்ட கிராம பகுதியில் பயிரிடப்பட்ட செங்கரும்பை பொங்கல் தொகுப்பிற்காக, கோவை, திருப்பூர் மாவட்ட அதிகாரிகள் கொள்முதல் செய்து வந்தனர். இந்த நிலையில் பொங்கல் தொகுப்பில் அரசு ஊழியர்கள் பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் வரி செலுத்துபவர்களுக்கு பொங்கல் தொகுப்பு இல்லை என அரசு அறிவித்ததால் அதிகாரிகள் கொள்முதல் செய்த கரும்புகளில் 20 முதல் 30 சதவீதம் கொள்முதலை நிறுத்தினர்.

இதனால் அப்பகுதியை சேர்ந்த கிராமத்தில் கொள்முதல் செய்து, லாரிகளில் ஏற்றப்பட்ட கரும்பை எடுத்து செல்லாததால் கடந்த மூன்று தினங்களாக 15-க்கும் மேற்பட்ட லாரிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே, கொள்முதல் செய்த கரும்புகளை எடுத்து செல்ல வேண்டும் என 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மேட்டூரில் இருந்து எடப்பாடி செல்லும் பிரதான சாலையில் கரும்பு லாரிகளை நிறுத்தி சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, அரசு பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதித்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மேட்டூர் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம், விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர், கொள்முதல் செய்த கரும்புகளை எடுத்துக் கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர், ஒவ்வொரு லாரியாக அந்தந்த மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE