மின்னணு சாதனங்களில் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளால் தொடர்ந்து வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு: மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ‘ மின்னணுவியல் - எதிர்காலம்’ தொடர்பான கருத்தரங்கில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் பேசியதாவது:

ஜவுளி, உணவு பதப்படுத்துதல் துறைகளில் மூலப்பொருட்களை இடமாற்றம் செய்வது மிகவும் சிரமம் என்பதால், ஒரு குறிப்பிட்ட பகுதியிலேயே தயாரித்து, ஏற்றுமதி செய்ய வேண்டியுள்ளது. ஆனால், மின்னணு பொருட்களை எங்கு வேண்டுமானாலும் உற்பத்தி செய்யலாம் என்பதால், உலகளாவிய மின்னணு வர்த்தகச் சந்தைச்சூழலை புரிந்து கொள்ள வேண்டும். இவற்றைகருத்தில் கொண்டு, மின்னணு உற்பத்தித் துறையில் ஈடுபடுபவர்களுக்கு ஊக்கத்திட்டங்கள் பலவற்றை மத்திய அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது.

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் 50 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். மின்னணு சாதனங்களில் 15 சதவீதம் அளவுக்கு மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகள் அளிக்கப்படுவதால், வேலைவாய்ப்பு களும் அதிகரிக்கின்றன.

செல்போனில், கேமரா, பேட்டரி உள்ளிட்ட பாகங்களை நாமே உற்பத்தி செய்கிறோம். இந்த உதிரிபாகங்களின் தயாரிப்புகளை இன்னும் விரைவுபடுத்த வேண்டும். உதிரிபாகங்கள் உற்பத்தியில் உள்நாட்டுக்கான செயல்பாட்டு திட்டங்களை அதிகரிக்க வேண்டும்.

செல்போன்கள் உள்ளிட்ட மின்னணு கருவிகளுக்கு செமிகண்டக்டர்கள் மற்றும் இதர பாகங்கள் மிக முக்கியமானவை. இதை கருதியே, செமிகண்டக்டர்களுக்கான தனி கொள்கையை தமிழக அரசு இந்த மாநாட்டில் வெளியிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE