அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி: போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம் தொடங்கியது

By செய்திப்பிரிவு

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் அரசுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் நேற்றே பல இடங்களில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.

போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசதொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். பணியில் மரணமடைந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களின் பஞ்சப்படி நிலுவையை வழங்க வேண்டும் என 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், பிஎம்எஸ் உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.

ஜன.9-ல் வேலைநிறுத்தம் நடைபெறும் என கடந்த 5-ம் தேதி தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்தன. இந்நிலையில், 3-ம் கட்ட சமரச பேச்சுவார்த்தை, தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் ஆகியவற்றின் மேலாண் இயக்குநர்கள் முன்னிலையில், சிஐடியு தலைவர் அ.சவுந்தரராஜன், அண்ணா தொழிற்சங்க பேரவைத் செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நடந்தது.

இந்த பேச்சுவார்த்தையிலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த சமரச பேச்சுவார்த்தையிலும், 'எங்கள் கோரிக்கைகள் எதையும் இப்போது ஏற்க இயலாது. பொங்கலுக்கு பிறகு பேசிக்கொள்ளலாம்' என்று அரசுத் தரப்பில் பதில் அளித்துள்ளனர். இந்த அரசு, போக்குவரத்து ஊழியர்களை 2-ம் தர குடிமக்களாக பார்க்கிறது. தமிழகத்தில் உள்ள எந்த பொதுத்துறை தொழிலாளிக்கும் இழைக்கப்படாத அநீதியை, போக்குவரத்து துறைக்கு இழைத்துள்ளது. ஓய்வுபெற்ற 96 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படாமல் இருக்கிறது.

கடைசியாக அமைச்சரிடம், 'மற்ற கோரிக்கைகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆனால் தற்போது, ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவையையாவது வழங்குங்கள். பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்காவது 4 மாத அகவிலைப்படியை பொங்கலுக்கு முன்பு கொடுங்கள். ஓய்வூதியர்களின் நிலுவையில் உள்ள பஞ்சப்படி குறித்து பிறகு பேசி தீர்த்துக் கொள்ளலாம். இந்த மாதத்தில் இருந்து நடைமுறையில் உள்ள 46 சதவீதம் பஞ்சப்படியை அமல்படுத்துங்கள். 15-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை நடத்தும் தேதியை அறிவிக்க வேண்டும்' ஆகிய கோரிக்கைகளை வைத்தோம். இதைக்கூட ஏற்க முடியவில்லை என்றால் வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று கூறுவதற்கு இந்த அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? அதனால் திட்டமிட்டபடி போராட்டம் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் கமலக்கண்ணன் கூறும்போது, "பேருந்துகள் அனைத்தும் முழுமையாக நிறுத்தப்படும். ஒட்டுமொத்த தொழிலாளர்களும் பேருந்துகளை இயக்க தயாராக இல்லை. தொமுசவும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

இதைதொடர்ந்து சென்னை மாநகரின் பல்வேறு பணிமனைகளில் தொழிலாளர்கள் பேருந்துகளை நிறுத்திவிட்டு நேற்று மாலையே போராட்டத்தை தொடங்கினர். பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்ததால், பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

இந்நிலையில், பணிமனை, பேருந்து நிலையங்களில் பணிக்கு வரும் ஊழியர்களை தடுத்தாலோ, மக்களுக்கு இடையூறு செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். இதனை கண்காணிக்க 21 ஆயிரம் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

'மக்கள் நலன் கருதி ஐஎன்டியூசி, வேலைநிறுத்தத்தில் பங்கேற்காது' என அதன் முதன்மை பொதுச் செயலாளர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பேருந்துகள் ஓடும்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு - பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பேருந்துகளை சுமுகமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்துள்ளார். நிதித்துறை செயலருடன் நேற்று ஆலோசித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஏற்கெனவே எதை செய்ய முடியும், எதை செய்ய முடியாது என்று தொழிற்சங்கங்களிடம் தெரிவித்திருக்கிறோம். அதிமுக ஆட்சியில் செய்யத் தவறியதை, திமுக ஆட்சியில் செய்ய வேண்டும் என்று அதிமுக தொழிற்சங்கமும், பழனிசாமியும் வலியுறுத்துவது வேடிக்கையாக உள்ளது. அவர்களால் செய்ய முடியாததை நாங்கள் செய்ய முடியாது என்று கூறவில்லை. நிதிநிலை சீரான பிறகு செய்வோம் என்று கூறியிருக்கிறோம். எங்களை எதிர்த்து வேலைநிறுத்த அறிவிப்பை செய்வது பொதுமக்களுக்கு இடையூறு செய்வது, அரசியல் உள் நோக்கம் கொண்டது.

அதிமுக ஆட்சியில் அகவிலைப்படி உயர்வை நிறுத்திவிட்டு சென்றனர். அதை ஒரே நாளில் வழங்குவது என்பது சிரமம். அதிமுக ஆட்சியில் ஏற்படுத்திய கடன் சுமை, கரோனா காலத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, இயற்கை பேரிடர்கள் நிவாரணம் போன்றவற்றால் தற்போதுள்ள நிதிநிலையை அறிந்து, கொஞ்சம் காத்திருக்க வேண்டும். பே மேட்ரிக்ஸ் முறை, 5% தீபாவளி போனஸ் போன்றவற்றை தொழிலாளர்கள் கேட்காமலேயே முதல்வர் வழங்கினார். வேலை நிறுத்தத்தை தொடங்கினால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், அரசு பேருந்துகளை சுமுகமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE