சென்னை: சென்னையில் 2 நாள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 26.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கஉள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக உயர்த்தும் இலக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை அடையும் வகையில், உலக முதலீட்டாளர் மாநாடு, ஜன.7 மற்றும் 8-ம் தேதிகளில் நடத்தப்பட்டது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில், நேற்று முன்தினம் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநாட்டில், மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
2 நாள் மாநாட்டில் அதிகாரப்பூர்வ பங்குதாரர் நாடுகளாக சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் அமெரிக்கா ஆகிய 9 நாடுகள் பங்கேற்றன. அதேபோல 50 நாடுகளை சேர்ந்த தொழில் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் வருகை தந்திருந்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை 4.30 மணிக்கு மாநாடு நிறைவு விழா நடைபெற்றது. அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் முன்னிலையில் புதிய முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன.
» ஜெர்மனி கால்பந்தாட்ட ஜாம்பவான் ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர் காலமானார்!
» ஜிம்பாப்வே உடனான 2-வது ஒருநாள் போட்டியை போராடி வென்ற இலங்கை அணி!
விழாவில் பங்கேற்ற இங்கிலாந்து நாட்டின் இணை அமைச்சர் லாக் தாரிக் அகமதுக்கு ஜல்லிக்கட்டு நினைவு சின்னத்தை முதல்வர் வழங்கினார். முதல்வரின் இலக்கை பிரதிபலிக்கும் வகையிலான ஓவியத்தை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா முதல்வருக்கு வழங்கினார். குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தொழில்துறை செயலாளர் அருண் ராய், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அர்ச்சனா பட்நாயக், மகேந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மகேந்திரா, டஃபே நிறுவன தலைவர் மல்லிகா சீனிவாசன், அதானி குழுமத்தை சேர்ந்த கரன் அதானி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக, தோல் அல்லாத காலணிகளை தயாரிக்கும் 3 உற்பத்தி ஆலைகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
மாநாட்டு நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நாங்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு, “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” என்ற பெயரில் நடத்தப்பட்ட முதலீட்டாளர் மாநாடுகள் மூலமாக, ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 803 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2 லட்சத்து 80 ஆயிரத்து 600 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தபட்டது. நான், ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு ரூ.17 ஆயிரத்து 371 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துகிற வகையில், 7 ஆயிரத்து 441 கோடி மதிப்பிலான முதலீடுகளை பெற்றோம். ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். 27 தொழிற்சாலைகளை திறந்து வைத்திருக்கிறேன். இதன் மூலமாக 74 ஆயிரத்து 757 இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுஉள்ளது.
எங்களுடைய அயராத உழைப்பு மற்றும் உங்களுடைய பங்களிப்பு காரணமாக, இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, இறுதி செய்யப்பட்ட மொத்த முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவாக, ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி என்பதை, இந்தியாவே உற்று நோக்கும் இந்த அவையில் பெரும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.
இந்த முதலீடுகள் மூலம், நேரடி வேலைவாய்ப்பு என்ற வகையில் 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 பேரும், மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 நபர்களுக்கும் என மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
மேம்பட்ட மின்னணுவியல் உற்பத்தி, பசுமை எரிசக்தி, தோல் அல்லாத காலணிகள், வாகனங்கள் மற்றும் மின் வாகனங்கள், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, தரவு மையங்கள், திறன்மிகு மையங்கள் தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற பலதரப்பட்ட துறைகள் மூலமாக இந்த முதலீடுகள் வந்திருக்கிறது.
மொத்த முதலீடுகளில், உற்பத்தித் துறையில், அதாவது தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பாக ரூ.3 லட்சத்து 79 ஆயிரத்து 809 கோடி முதலீடுகள், எரிசக்தித் துறை சார்பாக ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 157 கோடி முதலீடுகள், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பாக ரூ.62 ஆயிரத்து 939 கோடி முதலீடுகள், தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பாக ரூ.22 ஆயிரத்து 130 கோடி முதலீடுகள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக ரூ.63 ஆயிரத்து 573 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
சீரான, பரவலான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் விதமாக, இந்த முதலீடுகள் எல்லாம், மாநிலம் முழுவதும் பரவலாக மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த, தொழில்துறை அமைச்சர் தலைமையில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்படும். ஒவ்வொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் தொடர்ந்து கண்காணித்து, அதை ஒரு முழுமையான தொழிற்சாலையாக மாற்றுவதற்கு, அவர்கள் எல்லா முயற்சிகளையும் எடுப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், எஸ்.முத்துசாமி, பி.கே.சேகர்பாபு, ஆர்.காந்தி, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் தங்களது துறை சார்ந்த முதலீடுகள் தொடர்பான விவரங்களை முதல்வரிடம் வழங்கினர். பின்னர் முதலீட்டாளர்கள், முதல்வருடன் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
முதல்வர் வெளிநாடு பயணம்: முன்னதாக, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசும்போது, “உலக முதலீட்டாளர்கள் மாநாடு, தமிழகத்தின் தொழில்துறையை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அழைத்து செல்லும். தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சியை மேலும் மேம்படுத்தும் வகையில், வரும் 28-ம் தேதி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். எங்களுடன் முதல்வர் ஸ்டாலினும் வரவுள்ளார்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago