தமிழகத்தின் எதிர்காலத்துக்காக விஜயகாந்த் வழிநடத்துவார்: பிரேமலதாவுக்கு பியூஸ் கோயல் ஆறுதல்

By செய்திப்பிரிவு

சென்னை: விஜயகாந்த் மறைவையொட்டி, சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பிரேமலதாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தமிழகத்தின் எதிர்காலத்துக்காக விஜயகாந்த் நம்மை வழிநடத்துவார் என அப்போது அவர் தெரிவித்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் கடந்த மாதம் 28-ம் தேதி காலமானார். விஜயகாந்த் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், திரைத் துறையினர், பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, அரசியல் கட்சியினரும், திரைத்துறையினரும், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று மதியம் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு வந்து, அவரது படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பியூஸ் கோயல் கூறியதாவது: அரசியலில் எனது மூத்த சகோதரர் விஜயகாந்த் மறைவுக்காக, எனது சகோதரி பிரேமலதா விஜயகாந்த், நண்பர் சுதீஷ், விஜயகாந்த் மகன்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வந்தேன். விஜயகாந்த் எனது நல்ல நண்பர். சில ஆண்டுகள் நாங்கள் இருவரும் அரசியலில் ஒன்றாக பயணித்திருக்கிறோம். அவர் எப்போதும் சிரித்த முகத்துடனே இருப்பார். எல்லோரிடமும் எளிமையாக பழகக்கூடியவர்.

தமிழக மக்கள் மீது அளவுக்கதிகமான அன்பை கொண்டவர். விஜயகாந்தின் 40 ஆண்டு சினிமா வாழ்க்கையில் அவர் அடைந்த உச்சத்தை யாராலும் அடைய முடியாது. தமிழ் சினிமாவின் அடையாளமாக விஜயகாந்த் இருப்பார். விஜயகாந்திடம் இருந்து நான் நிறைய கற்றுள்ளேன். தமிழகத்தின் எதிர்காலத்துக்காக விஜயகாந்த் நம்மை தொடர்ந்து வழிநடத்துவார். இவ்வாறு தெரிவித்தார்.

அப்போது, பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மாவட்ட தலைவர்கள் டால்பின் தர், காளிதாஸ், தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில், தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக வலுவான கூட்டணியை அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. அந்த கூட்டணியில், தேமுதிகவையும் இணைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக அங்கம் வகித்த நிலையில், பாஜக மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க பிரேமலதாவை சந்தித்த வண்ணம் உள்ளனர். இதன்மூலம் தேர்தலில் பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என பாஜக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்