டெல்டா, கடலூர் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின: சுவர், மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

மயிலாடுதுறை/ நாகை/ திருவாரூர்/ தஞ்சை/காரைக்கால்/கடலூர்: தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சிகாரணமாக டெல்டா, கடலூர்மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதுடன், பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், பொறையாறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்கியது. வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாத சுவாமி கோயிலுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதியடைந்தனர். மழை காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் சாய்ந்துள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சுவாமிமலை, பாபுராஜபுரம், திருப்புறம்பியம், நீலத்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் சாய்ந்துள்ளன. மேலும், 3 ஓட்டு வீடுகள், 12 கூரை வீடுகள் பகுதியாக இடிந்து சேதமடைந்துள்ளதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்கா ழி தென்பாதி பகுதியில் குடியிருப்புகளைச் சூழ்ந்த மழை நீர்.

திருவாரூர் மாவட்டத்தில் விஜயபுரம் தாய்சேய் நல மருத்துவமனையை மழைநீர் சூழ்ந்ததால், அங்கிருந்த நோயாளிகள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மாவட்டத்தில் 3 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

நாகை மாவட்டத்தில் கனமழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து மழை பெய்தால் பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், வயலில்தேங்கிய மழைநீரை வடியவைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

காரைக்கால் மாவட்டத்தில் கருக்கங்குடி, கோட்டாபாடி, செல்லூர், சுரக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராகஇருந்த நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்துள்ளன. டெல்டா மாவட்டங்களில் அதிகபட்சமாக சீர்காழியில் 24 செ.மீ. மழை பெய்தது. இதேபோல, திருவாரூரில் 21 செ.மீ., வேளாங்கண்ணியில் 20 செ.மீ. மழை பதிவானது.

சுவர், மேற்கூரை இடிந்ததில்... கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அதம்பார் கிராமத்தில் ராஜசேகர் மகள் மோனிஷா(8), நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சி விச்சூர்காலனி தெருவில் மணியம்மாள்(60), வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த புலியூரைச் சேர்ந்த சண்முகம் மகன்அஜித்(15) ஆகியோர் உயிரிழந்தனர்.

சிதம்பரத்தில் 22 செ.மீ. மழை: கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் கடலூர், சிதம்பரம், புவனகிரி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், அண்ணாமலைநகர், சேத்தியாத்தோப்பு, வேப்பூர், தொழுதூர், முஷ்ணம், லால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சாலைகள், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

அதிகபட்சமாக சிதம்பரத்தில் 22 செ.மீ. மழை பதிவானது. கடலூரில் அண்ணா விளையாட்டு அரங்கில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு தற்காலிக கூடாரம் சரிந்து விழுந்தது. சிதம்பரம் கொத்தங்குடி தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.

காட்டுமன்னார்கோவில், குமராட்சி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அதேபோல, தெற்கு பிச்சாவரத்தில் கிள்ளை, பொன்னந்திட்டு பகுதிகளில் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலை பயிர்களும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

தெற்கு பிச்சாவரத்தில் வேர்க்கடலை வயலை சூழ்ந்த வெள்ளம்.

1,500 கனஅடி நீர்வரத்து: கடலூர் மாவட்டத்தின் பெரிய நீராதாரமான வீராணம் ஏரியின் நீர்பிடிப்புப் பகுதியில் கனமழை காரணமாக செங்கால் ஓடை மற்றும் காட்டாறுகள் மூலம் ஏரிக்கு விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 47.50 அடி கொள்ளளவு கொண்டவீராணம் ஏரியில் தற்போது 42.90அடி தண்ணீர் உள்ளது. சம்பாசாகுபடியை மிகவும் தாமதமாக தொடங்கிய புவனகிரி, பரங்கிப்பேட்டை பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிதம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 22 செ.மீ. அளவுக்கு மழை பெய்தபோதிலும், பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்கள் மற்றும் கிளை வாய்க்கால்கள் கடைமடை வரை தூர் வாரப்பட்டதால் தண்ணீர் விரைவாக வடிந்து வருகிறது.

அதேநேரத்தில், கடலூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கிஉள்ளன. பாதிக்கப்பட்ட நெல்,மணிலா பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE