சென்னை: சென்னை வாலாஜா சாலையில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் மற்றும் அதையொட்டியுள்ள நடைபாதையில் துர்நாற்றம் வீசி வருவதால் அப்பகுதியை கடந்து செல்லும் பாதசாரிகள் பெரும் அவதிஅடைகின்றனர். முகத்தை சுழித்தவாறே அப்பகுதியை கடந்து செல்கின்றனர்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள, தலைவர்கள் நினைவிடத்துக்கு செல்வதற்கும், அங்கிருந்து எழும்பூர், அண்ணாசாலையை ஒட்டியுள்ள பகுதிகளை விரைவில் அடைவதற்கும் வாகன ஓட்டிகள் பெரும்பாலும் பயன்படுத்துவது திருவல்லிக்கேணி வாலாஜா சாலையைதான். கலைவாணர் அரங்கம், விருந்தினர் மாளிகை, சேப்பாக்கம் சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி என சென்னையின் பல முக்கிய இடங்களை இந்த சாலை இணைக்கிறது. வாலாஜா சாலையில் அமைந்துள்ள திருவல்லிக்கேணி காவல்நிலையத்துக்கு எதிரே, ஆட்டோக்கள் நிறுத்தமும், மாநகராட்சியின் கட்டணத்துடன் கூடிய வாகன நிறுத்துமிடமும் செயல்பாட்டில் இருந்து வருகின்றன.
இந்நிலையில் ஆட்டோ நிறுத்தத்தை தொடர்ந்து அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரின் அருகே, வாலாஜா சாலையில் நடந்து செல்வோர் இங்கு சிறுநீர் கழிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பாதசாரிகள் மட்டுமின்றி, வாகன ஓட்டிகளும் கூட தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, நடந்து செல்வோர் முகம் சுழிக்கும் வகையில் திறந்தவெளியில் சிறுநீர் கழித்து செல்கின்றனர்.
இன்னும் சிலர் டிரான்ஸ்பார்மரை ஒட்டியுள்ள நடைபாதையிலும் சிறுநீர் கழித்து அசுத்தப்படுத்தி அலங்கோலமாக மாற்றி வருகின்றனர். இத்துடன் குப்பைகளும், கழிவுநீரும் சேர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இந்த நடைபாதை உள்ளது. டிரான்ஸ்பார்மரின் அருகேயே சிலர் குப்பைகளை கொட்டிவிட்டும் சென்றுவிடுகின்றனர். இதனால் இங்கு கடும் துர்நாற்றம் வீச தொடங்கிவிட்டது.
மக்கள் டிரான்ஸ்பார்மரை கடந்து செல்லும்போதெல்லாம் மூக்கை பிடித்துக் கொண்டே நடந்து செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் நிலவி வருகிறது. இங்கு மாநகராட்சியின் கட்டணத்துடன் கூடிய வாகன நிறுத்துமிடம் செயல்பட்டு வரும் நிலையில் இந்த கழிவுகளுக்கும், துர்நாற்றத்துக்கும் இடையே மக்கள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு அருகில் இருக்கும் பகுதிகளுக்கு சென்றுவரும் நிலையும் தொடர்கிறது.
இதையொட்டி மாநகராட்சி சார்பில் வாரத்துக்கு ஒருமுறை பிளீச்சிங் பவுடர் மூலம் டிரான்ஸ்பார்மரை ஒட்டிய பகுதிகளை சுத்தப்படுத்திவிட்டு செல்கின்றனர். ஆனால் அருகே உள்ள நடைபாதையை மாநகராட்சி ஊழியர்கள் கண்டுகொள்வதே இல்லை. என்னதான் மாநகராட்சி அவ்வப்போது சுத்தப்படுத்தி சென்றாலும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அங்கு சிறுநீர் கழிப்பதை நிறுத்துவதாக தெரியவில்லை. இதனால் நடைபாதை நடப்பதற்கே என்ற நிலைமாறி, திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடமாக மாறி வருகிறது.
இந்த வழியாக தினமும் நடந்து செல்லும் பாதசாரிகள், டிரான்ஸ்பார்மர் அருகே யாரும் சிறுநீர் கழிக்காதவாறு மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்காக தகுந்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் எனவும், இத்துடன் அருகே உள்ள நடைபாதையை சுத்தப்படுத்தி, பராமரித்து மக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றி கொடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரி கூறும்போது, “வாலாஜா சாலையில் டிரான்ஸ்பார்மரை சுற்றியுள்ள பகுதியை சுத்தப்படுத்த அடிக்கடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இருந்தும் பொதுமக்கள் தொடர்ந்து திறந்தவெளியில் சிறுநீர் கழித்து அசுத்தப்படுத்தி வருவது வேதனையளிக்கிறது. அருகே இருக்கும் நடைபாதையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுவெளியில் சிறுநீர் கழிப்பது தொடர்பாக பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம்” என்றார்.
ஏற்கெனவே வாலாஜா சாலையில் சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு ஏதுவாக ஸ்டேடியம் அருகே பொதுகழிப்பிட வசதி மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டேடியத்தில் இருந்து அண்ணாசலை வரை இடையே வாலாஜா சாலையில் வேறெங்கும் கழிப்பிடம் இல்லாததால் திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே மாநகராட்சி சார்பில் கழிப்பிட வசதியை ஏற்படுத்தி கொடுத்தால் மாற்று தீர்வாக இருக்கும் என்று பாதசாரிகள் தெரிவிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago