புதுச்சேரி | மழை நீருடன் கழிவுநீர் தேங்கி பாதிப்பு - முதல்வரிடம் முறையிட்ட பெண்கள்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் விடிய விடிய மழை பொழிந்து வருவதால் மழைநீருடன் கழிவுநீர் தேங்கியது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள், முதல்வர் ரங்கசாமியிடம் குறைகளை தெரிவித்து முறையிட்டனர்.

புதுச்சேரியில் நேற்று இரவு 8.30 முதல் விடிய விடிய மழை பெய்தது. இன்று காலை 8.30 மணி வரை 12.5 செ.மீ மழை பதிவானது. குறிப்பாக ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், ரெட்டியார்பாளையம், பாவாணார் நகர், பூமியான்பேட்டை, ஜவகர் நகர், நடேசன் நகர் இந்திராகாந்தி சதுக்கம், முதலியார்பேட்டை, உப்பளம் போன்ற தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் உட்புகுந்து மக்கள் அவதி அடைந்தனர். குறிப்பாக நகரின் மையப்பகுதியிலுள்ள பாவாணார் நகர், நடேசன் நகர், பூமியான்பேட் பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசத்தொடங்கியது. வீட்டில் தண்ணீர் தேங்கியதால் அப்பகுதி மக்கள் உறவினர்கள் வீடுகளுக்கு சென்றனர்.

இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், "மழைநீரை வெளியேற்றவோ, நேரில் பார்வையிடவோ அதிகாரிகள் வரவில்லை. நேற்று இரவு முதல் இதே பிரச்சினை உள்ளது. இப்பகுதி மக்களுக்கு பால், ரொட்டி, சாப்பாடு தர யாரும் முன்வரவில்லை. வாக்கு கேட்டுதான் வந்தனர். தற்போது அவர்களையும் காணவில்லை" என்று பெண்கள் குற்றம்சாட்டினர். முக்கியமாக நீண்ட மாதங்களாக பூமியான்பேட் பகுதியில் வாய்க்கால் கட்டுமானபணி நடந்து வருகிறது. அது இன்னும் முழுமையடையாததால், கழிவுநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக மக்கள் குறிப்பிட்டனர்.

தகவலறிந்த முதல்வர் ரங்கசாமி பூமியான்பேட், பாவாணர் பகுதிக்கு வந்தார். மக்கள் அவரை சூழ்ந்து கொண்டு முறையிட்டு பேசினர். அப்போது, "கழிவுநீர் மழைநீருடன் வீட்டுக்குள் வருகிறது. அத்துடன் அதில் ரசாயனம் கலந்துள்ளதுபோல் தோன்றுகிறது. மழைநீர் தேங்கிய பிறகு எங்களுக்கு தோல்வியாதி வந்து மருத்துவமனைக்கு செல்கிறோம். நிரந்தர தீர்வே கிடையாதா... இப்பகுதியில் கழிவறையும் இல்லை." என்று குறிப்பிட்டனர்.

இதையடுத்து முதல்வர் ரங்கசாமி, "வாய்க்கால் பணி முழுமையடைந்த பிறகு தண்ணீர் தேங்காது. வீட்டுக்குள் வராது. அதற்கான பணி செய்கிறோம். பணி முடியாததால் தண்ணீர் தேங்குகிறது. கழிவறை கட்ட நடவடிக்கை எடுக்கிறோம். பொதுப்பணித்துறையில் பேசுகிறோம்." என்றார்.

அதற்கு மக்கள், "தொடர்ந்து தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுகிறது. அரசு தரப்பில் அதிகாரிகள், எம்எல்ஏ என யாரும் வரவில்லை" என்றனர்.

இதுபற்றி முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு, "வேலையை பார்த்து பார்த்து செய்து வருகிறோம். அடைப்பு சரி செய்கிறோம். நிதி ஒதுக்கி தருகிறோம். ஒவ்வொரு இடமாக பார்க்கிறோம். துறையிடம் கலந்து பேச உள்ளேன். உணவு தரப்படும். தேவையெனில் தங்க ஏற்பாடு செய்யப்படும்" என்றார்.

முன் இருந்ததை விட தற்போது இப்பகுதி முழுக்க தண்ணீர் தேங்கியிருக்கிறதே என்று கேட்டதற்கு அங்கு அரசின் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வந்தவுடன் அவரிடம் முதல்வர் கேட்டார்.

அதற்கு "வாய்க்கால் கட்டுமானப் பணிக்காக தண்ணீர் செல்லும் பாதை அடைத்திருந்தோம். அதனால் தண்ணீர் இப்பகுதியில் தேங்கிவிட்டது. அதை சரி செய்து விடுவோம்" என்றார்.

உடனே முதல்வர் "இதுபோன்ற நேரங்களில் அதிகாரிகள் கவனமாக இருங்கள்" என்று குறிப்பிட்டார். அதைத்தொடர்ந்து முதல்வர் கூறுகையில், "அடுத்த முறை இப்பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டார். முன்னதாக பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆய்வு செய்து மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE