முதன்மை வழக்காக விசாரிக்கிறோம் - ஸ்டெர்லைட் முறையீட்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவாதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கை விரைந்து விசாரிக்க கோரி ஆலை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலை சார்பில் வழக்கறிஞர் விகாஷ் சிங், தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்தார். முறையீட்டில், "ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருப்பதால் ஆலையை நம்பி இருந்த மக்கள் வேலையிழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000 பேர் வேலையிழந்துள்ளனர். எனவே, அரசியல் ரீதியான விஷயங்களாக பார்க்காமல், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிய வழக்கின் விசாரணையை விரைந்து விசாரிக்க வேண்டும். இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் தரப்பில், "ஜனவரி மாதத்திலேயே முதன்மை வழக்காக எடுத்து விசாரிக்க முயற்சி செய்கிறோம்" என்று உத்தரவாதம் கொடுக்கப்பட்டது.

வழக்கின் பின்னணி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கடந்த 2018-ல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து வேதாந்தா குழுமத்தின் அந்த ஆலை மூடப்பட்டது. ஆலையை மேலும் இரண்டு மடங்கு விரிவாக்கம் செய்ய நிர்வாகம் முனைந்ததை எதிர்த்து குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், சில்வர்புரம், மற்றும் தூத்துக்குடி மாநகர மக்கள் போராடினர். போராட்டத்தின் நூறாவது நாளான 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்றனர்.

அப்போது, அவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்தனர். அதன் பிறகு ஏற்பட்ட மக்கள் கொந்தளிப்பால், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக 2018-ம் ஆண்டு மே 28-ம் தேதி ஆணைப் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஆலையை திறக்க அனுமதி கோரி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE