“வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை விரைந்து வழங்க நடவடிக்கை தேவை” - தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஆணையிட்டு, ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு ஆணையிட்டு, இன்னும் 3 நாட்களில் ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், அதில் இதுவரை எந்த முன்னேற்றமும் எட்டப்பட வில்லை. சொல்லுக்கு சொல் சமூகநீதி என்று பேசும் தமிழக அரசு, இதில் காட்டும் தேவையற்ற தாமதம், வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்குவதில் ஆர்வம் இல்லையோ? என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

தமிழ்நாட்டில், பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் இணைந்து பெரும் போராட்டங்களை நடத்திய பிறகு, கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை என்று கடந்த 2022 மார்ச் 31 ஆம் நாள் தீர்ப்பளித்தது. அப்போதே வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த தமிழக அரசு, அதன்பின் 9 மாதங்கள் தாமதமாக 2022 நவம்பர் 17-ஆம் நாள் தான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை திருத்தி அமைத்தது.

அதன்பின் இரு மாதங்கள் கடந்து 2023-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாளில் தான், உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியவாறு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து 3 மாதங்களில் அரசுக்கு பரிந்துரைப்பதற்கான கூடுதல் ஆய்வு வரம்பை (Additional Terms of Reference) பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்திருந்தது. அதன்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ஆம் நாளுக்குள் இட ஒதுக்கீட்டிற்கான பரிந்துரை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அத்தகைய பரிந்துரை எதையும் ஆணையம் வழங்கவில்லை. அதன்பின் 6 மாதம், 3 மாதம் என இரு முறை கூடுதல் காலக்கெடு வழங்கப்பட்டும் கூட வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்க அரசும், ஆணையமும் முன்வரவில்லை.

வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு வரும் 11 ஆம் நாளுடன் ஓராண்டு நிறைவடையவுள்ளது. இந்தக் காலத்தில், தமிழக அரசு நினைத்திருந்தால், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து அறிக்கை பெற்று, வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியிருக்க முடியும். ஆனால், ஆணையத்திடம் இருந்து பரிந்துரை அறிக்கையைக் கூட அரசு பெறவில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டின் பயனாளிகள் விவரங்களைப் பெற்று, அவர்களில் வன்னியர்களின் பிரதிநிதித்துவம் எவ்வளவு? என்பதை கணக்கிடுவது தான் ஆணையத்தின் பணி. எனினும், அதற்கான மனிதவளம் தங்களிடம் இல்லை என்று கூறியதைத் தொடர்ந்து அந்தப் பணிகளை அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையே நேரடியாக மேற்கொள்ளும் என்று கூறப்பட்டது. அதற்குப் பிறகும் 9 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால், வன்னியர் இட ஒதுக்கீட்டு சிக்கலில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை. அலட்சியம் காட்டுகிறது என்று தான் கருத வேண்டியிருக்கிறது.

வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக முதல்வருக்கு கடந்த இரு ஆண்டுகளில் 03.11.2021, 08.04.2022, 04.07.2022, 10.09.2022, 17.02.2023, 03.04.2023, 10.05.2023, 09.10.2023 ஆகிய நாள்களில் மொத்தம் 8 முறை கடிதங்கள் எழுதியிருக்கிறேன். பலமுறை தொலைபேசி வழியாக உரையாடியிருக்கிறேன். வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், 3 முறை முதல்வரை சந்தித்துப் பேசியுள்ளார். பா.ம.க.வின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையிலான மூத்த நிர்வாகிகளும் கட்சித் தலைமையின் பிரதிநிதிகளாக அமைச்சர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து பேசினார்கள். நிறைவாக கடந்த டிசம்பர் 29 ஆம் நாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் நானே நேரில் சந்தித்து வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டம் பற்றி வலியுறுத்தினேன். அப்போதும் ஜனவரியில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையை பெற்று இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். முதல்வர் உறுதியளித்ததைத் தவிர வன்னியர் இட ஒதுக்கீட்டு சிக்கலில் வேறேதுவும் நடக்கவில்லை.

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு வென்றெடுக்க முடியாதது அல்ல. அதுவும் குறிப்பாக வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றமே வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள நிலையில், அதை நிறைவேற்றித் தர வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு. அந்தக் கடமையை தமிழக அரசு,. நிறைவேற்றிக் கொடுக்கும் என்று நம்புகிறோம்; இல்லாவிட்டால் போராடி சமூகநீதியை வென்றெடுக்கவும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். சமூகநீதிக்காக போராட்டங்களை நடத்துவது பாட்டாளி மக்கள் கட்சிக்கும், வன்னியர் சங்கத்திற்கும் புதிதல்ல. வன்னியர் உள்ளிட்ட 108 சமூகங்களுக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் தொடங்கி, கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட வன்னியர் சமூகத்திற்கான 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வரை அனைத்து இட ஒதுக்கீடுகளையும் போராடித் தான் வென்றிருக்கிறோம் என்பது வரலாறு.

தமிழ்நாடு அரசை நான் மீண்டும், மீண்டும் கேட்டுக் கொள்வதெல்லாம், வன்னியர்கள் இட ஒடுக்கீடு குறித்து பரிந்துரை அளிப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடு வரும் 11 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள்ளாக ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று ‘‘வன்னியர் இடஒதுக்கீட்டுச் சட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்’’ என்று பல்வேறு காலங்களில் அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றுங்கள் என்பது தான். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அலட்சியமும், தாமதமும் செய்யப்படும் போக்கை மாற்றி, அதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். இம்மாத இறுதியில் கூடவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்