உலக முதலீட்டாளர்கள் மாநாடு | இரண்டாம் நாள் அமர்வு தொடங்கியது; 300 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன!

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசு சார்பில் சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வு இன்று தொடங்கியது. இன்றைய அமர்வில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

சென்னை வர்த்தக மையத்தில் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024”-ஐ தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஜன.07) தொடங்கி வைத்தார். இதில் முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இம்மாநாட்டில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளி அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வின்போது, தமிழக முதல்வர் முன்னிலையில் டாடா எலெக்ட்ரானிக்ஸ், பெகட்ரான், டிவிஎஸ் குழுமம், மிட்சுபிஷி, ஏ.பி. மோலார் மெர்ஸ்க், ஹுண்டாய், JSW, அசோக் லேலண்ட் மற்றும் வின்பாஸ்ட் ஆகிய முக்கிய நிறுவனங்களின் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இந்த நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வு இன்று (ஜன.08) தொடங்கியது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இன்றைய அரங்குகளை பார்வையிட தமிழகம் முழுவதும் சுமார் 45 லட்சம் பேருக்கு தமிழக அரசு சார்பில் குறுஞ்செய்தி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய அமர்வு மின்வாகனம், விவசாயம், உணவுத்துறை, எதிர்கால பொறியியல் துறை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் நடைபெற உள்ளது. இந்த அமர்வில் பாரத் பயோடெக் இணை நிறுவனர் சுசித்ரா எல்லா, மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்காக தனித்தனி அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE