“சென்னையில் மிக கனமழை இல்லை... படிப்படியாக மழை குறையும்” - தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் இன்று மிக கனமழை பெய்யலாம் என்று கூறப்பட்ட நிலையில், கனமழைக்கே வாய்ப்பு இருப்பதாகவும் மழை படிப்படியாக குறையும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், “நாம் எதிர்பார்த்த மழை மேகங்கள் டெல்டா மாவட்டங்கள் முதல் மகாபலிபுரம் வரை மையம் கொண்டிருந்தன. தற்போது அவை டெல்டாவிலிருந்து மேல்நோக்கி நகர்ந்து கடலூர், பாண்டிச்சேரி கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டுள்ளன. இதனால் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை கொட்டித் தீர்த்துள்ளது. தென்சென்னை பகுதியில் 50 முதல் 70 மி.மீ வரை மழை பெய்துள்ளது.

இப்போதும் சென்னையின் பல இடங்களில் மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது. சென்னையை நோக்கி மழை மேகங்கள் தொடர்ந்து நகர்ந்து வருவதை பார்க்கிறோம். ஆனால் அவை சமாளிக்கக் கூடிய மழையாகத் தான் இருக்குமே தவிர மிக கனமழையாக இருக்காது. இனி போகப் போக மழையின் தாக்கம் குறைந்து கொண்டே வரும். விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம்.

இது பெரிய புயல் சின்னமோ, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியோ அல்ல. இது போன்ற மழையை கணிப்பது கொஞ்சம் கடினம். தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜனவரியில் வரலாறு காணாத மழை பெய்தது. இது அந்த அளவுக்கு இருக்காது. வழக்கமான கனமழையாகவே இருக்கும்” இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

விடுமுறை: தொடர் மழை காரணமாக கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்து அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE