எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மழை விடுமுறை? - முழு விவரம்

By செய்திப்பிரிவு

கடலூர்: கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று (திங்கட்கிழமை, ஜன.8) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக மழை பொழிவு பதிவாகி உள்ளது. இதில் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நேற்று மாலை முதல் மழை பொழிந்து வருகிறது. நள்ளிரவு முழுவதும் மழை நீடித்த நிலையில் இன்று திங்கட்கிழமை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூரில் அதிகாலை 2.30 மணி நேர நிலவரப்படி சுமார் 82 மில்லிமீட்டர் மழை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 10-ம் தேதி வரை இந்த மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர் மட்டுமல்லாது நாகை, புதுச்சேரி, காரைக்கால், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை பதிவாகி உள்ளது.

இதனிடையே, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்து அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நிலவரம்: சென்னையில் தற்போது கனமழை நீடித்து வருகிறது. சென்னை மற்றும் புறநகரில் இன்று மிக கனமழை பெய்யலாம் என்று கூறப்பட்ட நிலையில், கனமழைக்கே வாய்ப்பு இருப்பதாகவும் மழை படிப்படியாக குறையும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதன் விவரம் > “சென்னையில் மிக கனமழை இல்லை... படிப்படியாக மழை குறையும்” - தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

11 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான அல்லது கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE