பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1,000 பெறுவதற்கு டோக்கன் விநியோகம் தொடங்கியது

By செய்திப்பிரிவு

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1,000 பெறுவதற்கு தமிழகம் முழுவதும் வீடு, வீடாக டோக்கன் விநியோகம் தொடங்கியது.

பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்புடன் கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் பணமும் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கலுக்கு அரிசி அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதிகொண்டாடப்பட உள்ள நிலையில், 2 கோடிக்கும் மேற்பட்ட அரிசி அட்டைதாரர்களுக்கு முன்னதாகவே ரேஷன் கடைகளில் ரூ.1,000 மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், பொங்கல் தொகுப்புடன் இலவச வேஷ்டி, சேலையும் வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புபெறும் பயனாளிகளுக்கு வீடு, வீடாகச் சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணியை ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று தொடங்கினர். நாளை வரை டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது. வரும் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரைஅனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. விடுபட்டவர்கள் 14-ம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.

சென்னையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் தொடங்கி வைக்கின்றனர்.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை பணியாளர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள், எந்தப் பொருளும் பெறாத அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1.15 கோடி மகளிர் வங்கிக் கணக்கில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி செலுத்தப்படுகிறது. பொங்கல் பண்டிகை வருவதால், இந்த மாதம் 10-ம் தேதி உரிமை தொகை செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE