நீலகிரி மாவட்டம் பந்தலூரில் இருவரை கொன்ற சிறுத்தை சிக்கியது: வனத் துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

By ஆர்.டி.சிவசங்கர்


பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூரில் இருவரைக் கொன்ற சிறுத்தையை வனத் துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்.

பந்தலூர் அருகே கடந்த மாதம் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் 3 பெண்கள் காயமடைந்தனர். இதில் இருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், சரிதா என்ற பெண் கோவை மருத்துவமனையில் உயிரிழந்தார். அதே பகுதியில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு சிறுத்தை தாக்கியதில் சிறுமி ஒருவர் காயத்துடன் உயிர் தப்பினார்.

சிறுத்தையைப்‌ பிடிக்க வனத் துறையினர் 6 இடங்களில் கூண்டுகளை அமைத்துக் கண்காணித்தனர். ஆனால், சிறுத்தை சிக்கவில்லை. இந்நிலையில், நேற்றுமுன்தினம் பந்தலூர் மேங்கோரேஞ்ச் பகுதியில், அங்கன்வாடியில் இருந்து தாய் மிலந்திதேவியுடன் சென்ற நான்சி (3) என்ற சிறுமியை, சிறுத்தை தாக்கி இழுத்துச் சென்றது. பின்னர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி, பந்தலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

சிறுமி உயிரிழந்த சம்பவத்தால் ஆவேசமடைந்த பொதுமக்கள், தொண்டியாளம் உள்ளிட்ட 3 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, நேற்றும் சாலை மறியல் போராட்டம் தொடர்ந்தது. மேலும், வனத் துறையினரைக் கண்டித்து கூடலூர் தாலுகாவில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன.

அப்பகுதியில் பதற்றம் நிலவியதால், மாவட்ட ஆட்சியர் மு.அருணா, கோவை சரகடிஐஜி சரவணசுந்தர், காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல் ஆகியோர் சென்று, போராட்டம் நடத்தியவர்களை சமாதானப்படுத்தினர். கூடலூர் மற்றும் பந்தலூரில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, வனத் துறையினர் சிறுத்தையைப் பிடிக்க தீவிரமாக முயற்சித்தனர். பாதுகாப்புக்காக முதுமலையிலிருந்து இரு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.

இதற்கிடையில், ஆம்பரோஸ் என்ற பகுதியில் புதரில் சிறுத்தை பதுங்கியிருப்பது நேற்று கண்டறியப்பட்டது. முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் கும்கி யானை மீது அமர்ந்து, துப்பாக்கி மூலம் சிறுத்தைக்கு மயக்க ஊசியை செலுத்தினார். இதில் மயக்கமடைந்த சிறுத்தையை வனத் துறையினர் வலையைப் போட்டு பிடித்து, கூண்டில் அடைத்து, முதுமலைக்கு கொண்டுசென்றனர்.

நிவாரணம் அறிவிப்பு: இதற்கிடையில், நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சிறுத்தை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த இரு வரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE