உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி பெற வேண்டும்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து

By செய்திப்பிரிவு

தருமபுரி: சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி பெற வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை, பாப்பாரப்பட்டியில் உள்ள சுப்பிரமணிய சிவா நினைவிடத்திலும், அங்குள்ள பாரத மாதா சிலைக்கும் மாலை அணிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சுதந்திரப் போராட்டத் தியாகிசுப்பிரமணிய சிவாவின் எண்ணப்படி, பாரத மாதா கோயில் கட்ட வேண்டும். தேவையெனில் பாஜகசார்பில் கோயிலைக் கட்டி ஒப்படைக்கிறோம். தமிழகத்தில் 2.26கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. அதிக வசதி படைத்தவர்களைத் தவிர மற்ற அனைத்து அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு அமைந்த பின்னர், உலகநாடுகள் மத்தியில் இந்தியாவின் மீது நம்பிக்கை அதிகரித்து, முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றுள்ளார். மொத்தம் ரூ.10 லட்சம் கோடி முதலீடு கிடைக்கும். இந்த முதலீட்டாளர் மாநாடு வெற்றி பெற வேண்டும்.

புதிய தொழிற்சாலைகள்: இவற்றில் கிடைக்கும் முதலீடுகள் மூலம் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தென் மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள் அமையவேண்டும். இதனால் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். பாஜக மாநில நிர்வாகிகள் கே.பி.ராமலிங்கம், நரேந்திரன், மாவட்டத் தலைவர் பாஸ்கர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE