“தமிழகத்தில் முதலீடுகள் உயர பிரதமரே காரணம்” - ஆளுநர் தமிழிசை

By செய்திப்பிரிவு

கோவை: தமிழகத்தில் தொழில் முதலீடுகள் உயர பிரதமர் மோடியே காரணம் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. நாட்டின் மீதும், பிரதமர் நரேந்திர மோடியின் மீதும் உள்ள நம்பிக்கை காரணமாக தான் முதலீடுகள் உயருகின்றன. இதற்கு காரணம் பிரதமர் மோடி பல்வேறு வெளி நாடுகளுக்கு சென்று விதைத்த நல்ல எண்ணங்களே ஆகும். இந்தியா தொழில் நடத்த ஏற்ற நாடு என்ற நம்பிக்கையில் தமிழகத்திற்கு முதலீட்டாளர்கள் வருகிறார்கள்.

மாநிலத்தை மட்டுமே நம்பி முதலீடுகள் வருவதில்லை. முதலீடுகளில் முதன்மையானது நாட்டின் மீது நம்பிக்கை தான். முதலீட்டாளர்களை ஈர்ப்பது மட்டுமே நோக்கம் இல்லை. தொழிற்சாலை தொடங்கும் போது எந்த பிரச்சினை வந்தாலும் அதை சரி செய்யும் அளவுக்கு கட்டமைப்பு இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம். அதில் தான் கவனம் செலுத்த வேண்டும். மாநாடு நடத்துவது பெரிதல்ல, அது எந்த அளவுக்கு வெற்றிகரமாக நடக்கிறது என்பது தான் முக்கியம். தொழிற்சாலைகள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வருவதை உறுதி செய்ய வேண்டும்.

மின் கட்டணம் உயர்வு, போக்கு வரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம், வெள்ளம் பாதிப்பு ஆகிய பிரச்சினைகள் தமிழகத்தில் உள்ளது. பிரதமர் மோடி திருச்சி விமான நிலையத்தை திறந்து வைத்த போது பலர் விமர்சனம் செய்தனர். ஆனால் சென்னைக்கு அருகே தொடங்கி வைக்கப்பட்ட பேருந்து நிலையம் பாதி திறந்தும், திறக்காமலும் மக்கள் சிரமப்படுகிறார்கள். கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் 10 ஆண்டுகளுக்கும் மேல் கிடப்பில் உள்ளதற்கு மத்திய அரசு காரணம் என்பது அரசியல் காழ்ப் புணர்ச்சி. பிரதமர் மோடி தமிழகம் மீது அன்பு செலுத்துவதை தினமும் பார்த்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE