மழையால் நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு: பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் உபரிநீர் திறப்பு

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்/ குன்றத்தூர்: திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் விட்டு விட்டு பெய்துவரும் மழையால் நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக நேற்று பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அந்த மழை, மிக கன மழையாக பெய்யக் கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

ஆகவே, இரு மாவட்டங்களில் உள்ள சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் வரத்து உள்ளிட்டவை தொடர்பாக நீர்வள ஆதார துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், மழையால், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய இரு குடிநீர் ஏரிகளுக்கு நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகவே, அவ்விரு குடிநீர் ஏரிகளில் இருந்து நேற்று மாலை 5.30 மணியளவில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரிநீர் திறக்கப்பட்டது.

இதில், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு, 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு நேற்று காலை நிலவரப்படி, 3,064 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 34.75 அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 40 கன அடியாகவும் இருந்தது. இந்நிலையில், பூண்டி ஏரியில் இருந்து நேற்று மாலை விநாடிக்கு 50 கன அடி என உபரி நீர் திறக்கப்பட்டது.

அதே போல், 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு, 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு நேற்று காலை நிலவரப்படி, 3,102 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 21.93 அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 36 கன அடியாகவும் இருந்தது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று மாலை விநாடிக்கு 25 கன அடி என, உபரி நீர் திறக்கப்பட்டது.

நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் நீர் வரத்தின் அளவுக்கேற்ப, பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு, படிப்படியாக அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE