சென்னையில் இன்றும் நாளையும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் தொடங்கி வைக்கிறார்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடங்குகிறது. இந்த 2 நாள் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2024 சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஜன.7, 8-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டுக்காக பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்படி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று காலை 10 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றவுள்ளார்.

மத்திய அமைச்சர் பங்கேற்பு: தொடக்க விழாவில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகிறார். தமிழக தொழில்துறை அமைச்சர்டி.ஆர்.பி.ராஜா வரவேற்புரையும், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா நன்றியுரையும் நிகழ்த்தவுள்ளனர். அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 35 நாடுகளில் இருந்து பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்கள் மாநாட்டில் பங்கேற்கின்றன.

இதன் மூலம் தமிழகத்துக்கு ரூ.5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கவும், 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை பெறும் செயல்திட்டத்தை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதல்வர் முன்னிலையில் தொழில் வழிகாட்டி மையம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. ஜவுளி, காலணி தொழில்கள், எலெக்ட்ரிக் வாகனங்களின் எதிர்காலம், வேளாண்மை தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் சார்ந்த அமர்வுகள் நடத்தப்படவுள்ளன. சிறு தொழில் நிறுவனங்கள், புத்தொழில்கள் ஆகியவற்றுக்கும் தனி அமர்வுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு: அடிடாஸ், போயிங் நிறுவனங்கள் சென்னையில் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான VinFast தமிழகத்தில் தொழில் தொடங்கவுள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவில், ரூ.16,000 கோடி மதிப்பில் தூத்துக்குடியில் EV Car மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை VinFast நிறுவனம் அமைக்கவுள்ளது. இது தென்தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சல். உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 -ல் இன்னும் இதுபோன்ற பல வியத்தகு சாதனை அறிவிப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE