நிபந்தனையின்றி ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்க ஓபிஎஸ் வேண்டுகோள்: நிதி நெருக்கடியிலும் ரொக்கப் பரிசு அறிவித்திருப்பதாக முத்தரசன் வரவேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

பொங்கல் பண்டிகை வரும் 15-ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக் கரும்புடன் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். இதுகுறித்து பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: பொங்கல் பண்டியை தமிழக மக்கள் கொண்டாடும் வகையில், எவ்வித நிபந்தனைகளுமின்றி, பொங்கல் பரிசு அனைத்து குடும்பஅட்டைதாரர்களுக்கும் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போதையை திமுக ஆட்சியில் இந்த நடைமுறைக்கும் பங்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 5-ம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லாத அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1,000 பொங்கல்பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடுநிலைக்கு எதிரான செயலாகும்.

எல்லா திட்டங்களுக்கும் நிபந்தனைகளை விதித்து பயனாளிகள்எண்ணிக்கையை குறைப்பதுபோல, பொங்கல் பரிசு வழங்குவதிலும், நிபந்தனைகளை விதித்து பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்து இருப்பது மக்களிடையை பாரபட்சத்தை ஏற்படுத்துவதுபோல உள்ளது. இருக்கின்ற சலுகைகளை பறிக்கும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டு இருப்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. இது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எனவே, ரூ.1,000 ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: தமிழக அரசு கடந்த 3-ம் தேதி அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப் பணம் இடம்பெறவில்லையே என கேள்வி எழுந்தது. இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் பொங்கல் பரிசு தொகுப்பில் பணம் இடம்பெற வேண்டும் என கோரிக்கை வைத்தன. ஜனநாயக உணர்வு கொண்ட மாநில அரசு, கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் பொங்கல் பரிசாக ரூ.1,000 அறிவித்திருப்பதற்கு நன்றி பாராட்டி வரவேற்கிறோம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பொங்கல் தொகுப்புக்கு கொடுக்கக்கூடிய ரூ.1,000, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமானது அல்ல. யானை பசிக்கு சோளைப்பொறிபோல இருக்கிறது.

கனமழை பாதிப்பில் பலர் தங்களது உடமைகளை இழந்து நிற்கின்றனர். அரசு நிகழ்ச்சிகளை பல கோடி ரூபாய்க்கு நடத்த முடிகிறது என்றால் பொங்கல் தினத்தையொட்டி மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க முன்வர வேண்டியதும் அரசின் கடமை. இல்லையென்றால் மனிதாபிமானம் அடிப்படையில் ரூ.3 ஆயிரமாவது வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE