ரயில்வே மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் புதிய பணியாளர்களை நியமிக்க ஐகோர்ட் இடைக்கால தடை

By செய்திப்பிரிவு

சென்னை: ரயில்வே மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் புதிய பணியாளர்களை நியமிக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 202 உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, தெற்கு ரயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை நிராகரித்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் கடந்த டிச.19-ம் தேதி உத்தரவிட்டது. அதையடுத்து, 202 ஒப்பந்தப் பணியாளர்களை நீக்கிவிட்டு, அந்த இடங்களில் புதிய பணியாளர்களை நியமிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள், தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என உத்தர விட்டது. ஆனால், புதிதாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு உயர் நீதிமன்ற உத்தரவை மீறி பணி நியமன உத்தரவுகளை ரயில்வே நிர்வாகம் பிறப்பித்துள்ளதாக குற்றம்சாட்டி, அவர்களை பணி நிரந்தரம் செய்ய தடை விதிக்கக் கோரி, தெற்கு ரயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், கே.குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், ‘‘ஏற்கெனவே நியமிக்கப்பட்ட 202 ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்குப் பதிலாக அவர்களை நீக்கிவிட்டு, புதிதாக மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் உதவியாளர்களை நியமிக்கக் கூடாது என தடை விதிக்க வேண்டும்’’ என்று வாதிடப்பட்டது. உத்தரவை மீறி விட்டது: இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ரயில்வே நிர்வாகம் தரப்பில், மனுதாரர் சங்க உறுப்பினர்களின் நியமனம் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டு விட்டது.

அவர்களுக்குப் பதிலாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்களின் தேர்வு நடவடிக்கைகள் கடந்த ஆண்டு மார்ச் மாதமே தொடங்கிவிட்டது. பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற மனுதாரர்கள் தரப்பு கோரிக்கையை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் நிராகரித்து விட்டதால் அவர்களை நீக்கிவிட்டு, புதிதாக ஒப்பந்தப் பணியாளர்கள் 60 நாட்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக் கப்பட்டது. ரயில்வே நிர்வாகத்தின் இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என ஏற்கெனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி விட்டதாகக் கூறி, புதிய ஒப்பந்தப் பணியாளர்களின் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.

மேலும், மருத்துவமனைகளில் உதவியாளர்கள் பற்றாக்குறை யாக இருந்தால், அந்த இடங்களில் மனுதாரர்கள் தரப்பு சங்க உறுப்பினர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், அப்படி மறு நியமனம் வழங்குவதன் மூலம் அவர்களும் எந்த உரிமையும் கோர முடியாது என்றும் அறிவுறுத்தினர். அத்துடன், இந்த வழக்கில் ரயில்வே நிர்வாகம் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 3-வது வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE