செயல்முறை கற்றலுக்கு முக்கியத்துவம் தரும் அரசுப் பள்ளி: களப் பயிற்சியில் அசத்தும் மாணவ, மாணவியர்

பொதுத் தேர்வுகளை மையப்படுத்தி பாடம் நடத்தி மாணவ, மாணவியரை மனப்பாடம் செய்ய வற்புறுத்தும் பள்ளிகள் ஏராளம். தனியார் பள்ளிகளுக்கு ஈடாக தேர்ச்சியைக் காட்டும் அரசுப் பள்ளிகளும் தற்சமயம் அதிகரித்து வருகின்றன.

ஆனால் மனப்பாடம் செய்யும் வகுப்பறை பாடங்களை விட, செயல்முறை கற்றலே சிறந்தது என மாணவர்களுக்குப் பல்வேறு களப் பயிற்சிகள் அளித்து வருகிறது பொள்ளாச்சி நல்லிக்கவுண்டன்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி.

"கணிதத்தில் அளவைகள் குறித்து பாடம் நடத்தினோம். நீட்டல் அளவைகள், முகத்தல் அளவைகள் எனப் புத்தகத்தில் உள்ளதை மட்டுமே கூறினால், என்ன புரியும்?. எனவே அருகே உள்ள ரேஷன் கடைக்கு அழைத்துச் சென்று, மண்ணெண்ணெய் ஊற்றுவது முதல் அரிசி வழங்குவது வரை என்னென்ன வடிவங்களில் அளவைகள் உள்ளன. அதில் எவ்வாறெல்லாம் அளக்கலாம் எனக் கற்றுக் கொடுத்தோம். தேர்வில் சிறப்பாக பதிலளித்து ள்ளனர் என்கின்றனர் இங்குள்ள ஆசிரியர்கள்.

இலவச ஆம்புலன்ஸ் சேவை மற்றும் முதலுதவி குறித்த செயல்விளக்கம் 108 ஆம்புலன்ஸ் மூலம் மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை கற்றுக் கொடுக்கப்பட்டது. ஆசிரியர் பழனிக்குமார் என்பவரிடம் கேட்டபோது, 5-ம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் வரும் கோல்டன்ஹவர் பாடத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை, முதலுதவி குறித்த நிகழ்வுகள் வரும். வெறுமனே முதலுதவி செய்ய வேண்டுமென்றால் எப்படி மாணவர்களுக்குப் புரியும். அதனாலேயே 108 ஆம்புலன்ஸ் ஒன்றை வரவழைத்து அதன் அனைத்து செயல்பாடுகளையும் விரிவாக விளக்க ஏற்பாடு செய்தோம். ஆம்புலன்ஸ் சேவை இனி ஆயுளுக்கும் அவர்களுக்கு மறக்காது என்றார்.

சமூக அறிவியலில் உள்ளாட்சி குறித்த பாடத்திற்காக பஞ்சாயத்து அலுவலகத்துக்கு மாணவ, மாணவியரை அழைத்துச் சென்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல உணவுத் திருவிழா என்ற தலைப்பில் இயற்கை உணவுகளை மாணவ, மாணவியரே தயாரித்து வந்து விளக்கமளிக்கவும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோல ஏராளமான செயல்முறை கற்றல் விளக்கங்களை தினசரி வெவ்வேறு வடிவங்களில் கற்பித்து வருகிறது அந்த பள்ளி. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து இங்கு 190 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் சந்திரா, மற்ற ஆசிரியர்கள் முயற்சியால் பாட இணைச் செயல்பாடுகள் என்ற அடிப்படையில் இந்த செயல்வழிக் கற்றல் முறை இங்கு மேற்கொள்ளப்படுகிறது.

குழப்பமான பாடப் பிரிவுகளை செயல் வழிக்கற்றலில் முன்வைக்கும் இப்பள்ளி மாணவ, மாணவிகள் அனைவருக்கு உண்மையான கல்வியை வழங்குகிறது என்பதில் சந்தேகமில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE