சென்னை: மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம், சென்னையின் பிற பகுதிகளுக்கு பயணிகள் செல்ல போதிய இணைப்பு வசதி இல்லாமல் கடுமையாக நெருக்கடிகளையும், பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. கிளாம்பாக்கத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இணைப்பை ஏற்படுத்தித் தருவதற்கு சிறந்த வழி விமான நிலையம், கிளாம்பாக்கம் மெட்ரோ தொடர்வண்டித் திட்டத்தை செயல்படுத்துவது தான். கிளாம்பாக்கம் மெட்ரோ பணிகளை உடனே தொடங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட புதிய பேருந்து முனையம், சென்னையின் பிற பகுதிகளுக்கு பயணிகள் செல்ல போதிய இணைப்பு வசதி இல்லாமல் கடுமையாக நெருக்கடிகளையும், பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இவ்வளவுக்குப் பிறகும் சென்னை விமான நிலையத்தையும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தையும் இணைக்கும் மெட்ரோ தொடர்வண்டித் திட்டப் பணிகளை தொடங்க தமிழக அரசு முன்வராதது வருத்தமளிக்கிறது.
கிளாம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையம் ஏற்கனவே கோயம்பேடு புறநகர் பேருந்து முனையம் செயல்பட்டு வந்த இடத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது. சென்னையின் வட எல்லையான எண்ணூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல கிளாம்பாக்கத்திகிருந்து 50 கி.மீக்கு மேல் பயணிக்க வேண்டும். ஆனால், அதற்குத் தேவையான அளவில் இணைப்பு பேருந்து வசதிகள் செய்யப்படவில்லை. அதனால், வெளியூர்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு வரும் பயணிகள் சென்னைக்கு செல்வதற்கும், சென்னையிலிருந்து வெளியூர் செல்ல வேண்டிய மக்கள் கிளாம்பாக்கம் செல்வதற்கும் போதிய ஊர்தி வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பொங்கலுக்குப் பிறகு கிளாம்பாக்கம் பேருந்து முனையம் முழு அளவில் செயல்படும் போது நிலைமை இன்னும் மோசமாகும்.
கிளாம்பாக்கத்திலிருந்து சென்னைக்கு இணைப்பு வசதியை ஏற்படுத்தித் தரும் நோக்கத்துடன் அங்கு புதிய தொடர்வண்டி நிலையம் அமைக்கும் முயற்சியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. அதற்காக தெற்கு தொடர்வண்டித் துறைக்கு தமிழக அரசு ரூ.20 கோடி வழங்கியுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்றாலும் கூட, அதற்காக வழங்கப்பட்டுள்ள ஓராண்டு காலக்கெடு மிகவும் அதிகம் ஆகும். கிளாம்பாக்கம் வழியாக தொடர்வண்டிப்பாதை செல்கிறது. அங்கு தொடர்வண்டி நிலையம் மட்டும் தான் அமைக்கப்பட வேண்டும்.
அதற்குத் தேவையான நிலத்தில் பெரும்பகுதி தொடர்வண்டித் துறையிடம் உள்ளது. கட்டுமானப் பணிகளை திட்டமிட்டு மேற்கொண்டால் 6 மாதங்களில் முடிக்க முடியும். காஞ்சிபுரம் தொடர்வண்டி நிலையம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் முடங்கிக் கிடந்த நிலையில் 2002 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் நாள் தொடர்வண்டித்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்ற பா.ம.க.வின் ஏ.கே.மூர்த்தி, அடுத்த 3 மாதங்களில் பணியை முடித்து, அதே ஆண்டு நவம்பர் 2 ஆம் நாள் திறப்புவிழா நடத்திய வரலாறு இருப்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும்.
கிளாம்பாக்கத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இணைப்பை ஏற்படுத்தித் தருவதற்கு சிறந்த வழி விமான நிலையம், கிளாம்பாக்கம் மெட்ரோ தொடர்வண்டித் திட்டத்தை செயல்படுத்துவது தான். கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைப்பது என முடிவெடுக்கப்பட்ட போதே, ஏற்கனவே விமான நிலையம் வரை அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ தொடர்வண்டிப் பாதையை நீட்டிக்க தீர்மானிக்கப் பட்டு அதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டு விட்டன. 2021 ஆம் ஆண்டில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு தொடங்கிய பிறகும் கூட பணிகள் தொடங்கப்படவில்லை. அவ்வளவு ஏன்? அத்திட்டத்திற்கு கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசு ஒப்புதல் கூட வழங்கவில்லை என்பது தான் உண்மை.
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ பாதை 15.30 கி.மீ தொலைவு கொண்டதாகும். இப்பாதை மொத்தம் 13 தொடர்வண்டி நிலையங்களைக் கொண்டதாகும். 2021 ஆம் ஆண்டில் பணிகள் தொடங்கப்பட்டிருந்தால் ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்தை நிறைவேற்றி முடித்திருக்க முடியும். ஆனால், பணிகள் தொடங்கப்படாத நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்திற்கான மதிப்பு ரூ.4080 கோடியாக உயர்ந்தது. கிளாம்பாக்கம் மெட்ரோ பணிகள் இப்போது தொடங்கப்பட்டால் குறைந்தது ரூ.4500 கோடி செலவாகும். ஆனாலும், கிளாம்பாக்கம் மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தின் தேவையுடன் ஒப்பிடும் போது இந்த செலவு ஒரு பொருட்டல்ல.
கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டபோதே, மெட்ரோ தொடர்வண்டி நிலையம் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டது. ஆனால், பேருந்து முனையம் திறக்கப்பட்டு விட்ட நிலையில், மெட்ரோ பாதைக்கான பணிகள் கூட இன்னும் தொடங்கப்படாததற்கு தமிழக அரசில் சரியான திட்டமிடல் இல்லாதது தான் காரணம் ஆகும். இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை; அதனால், கிளாம்பாக்கம் மெட்ரோ பணிகளை மேற்கொள்ள தமிழக அரசிடம் நிதி இல்லை என்பதெல்லாம் உண்மை தான். ஆனால், இவற்றையெல்லாம் கடந்து விமான நிலையம், கிளாம்பாக்கம் மெட்ரோ தொடர்வண்டி பாதை இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.
எனவே, மத்திய அரசுடன் பேச்சு நடத்தி இரண்டாம் கட்ட மெட்ரோ தொடர்வண்டித் திட்டம், கிளாம்பாக்கம் தொடர்வண்டித் திட்டம் ஆகியவற்றுக்கு ஒப்புதல் பெற வேண்டும். அவை ஒருபுறம் நடைபெறும்போதே விமான நிலையம் மற்றும் கிளாம்பாக்கம் மெட்ரோ தொடர்வண்டிப் பாதை அமைக்கும் பணிகளை தொடங்கி விரைந்து நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago