ஒருநாள் அவகாசம் கேட்ட தமிழக அரசு - வேலைநிறுத்த முடிவு தொடரும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இரண்டாவது முறையாக போக்குவரத்து தொழிற்சங்களுடன் சென்னையில் அமைச்சர் எஸ்எஸ்.சிவசங்கர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர் அமைச்சர் சிவசங்கர் கூறும்போது, “நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.

இதனிடையே, தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறும்போது, "இன்றைய பேச்சுவார்த்தையில் அமைச்சரிடம் எங்களின் 6 கோரிக்கைகளை விளக்கிச் சொன்னோம். நாளை மறுநாள் அரசின் முடிவு குறித்து தெரிவிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். எனவே, நாளை மறுநாள் வரை அமைச்சரின் பதிலுக்கு காத்திருக்கிறோம். அதுவரை வேலைநிறுத்த முடிவு தொடரும். வேலை நிறுத்தத்துக்கான பிரச்சாரமும் தொடரும். வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எங்களோடு பேசியபோது அரசிடம் பேசி முடிவை சொல்வதாக தெரிவித்தார். எங்களின் கோரிக்கை இன்று, நேற்று சொல்லப்பட்டது அல்ல. நீண்டகாலமாக இருக்கின்ற கோரிக்கை. ஓய்வுபெற்ற ஊழியர்களின் நிலுவை தொகை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அமைச்சரிடம் சொன்னோம். நிதித்துறையுடன் பேசி ஒரு முடிவை அறிவிப்பதாக அமைச்சரும் உறுதியளித்துள்ளார். எனவே, அமைச்சரின் முடிவை அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்போம். அதுவரை நாங்கள் அறிவித்த போராட்டம் தொடரும்" என்று தெரிவித்தனர்.

முன்னதாக பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், "தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருக்கிறார்கள். போக்குவரத்துத் துறை தொழிற்சங்கத்தினரின் நிதி கோரிக்கைகள் தொடர்பாக நிதித்துறையிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். அதன்பிறகு முடிவெடுக்கப்படும். அதனால், ஒருநாள் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என்றார்.

வேலைநிறுத்த பின்னணி: ஜன.9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எஃப், பிஎம்எஸ் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கியிருந்தன.

இதுதொடர்பான 2-ம் கட்ட சமரச பேச்சுவார்த்தை, சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை முன்வைக்கும் வகையில் தங்களையும் அனுமதிக்க வேண்டும் என ஓய்வூதியர் சங்க உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து பேச்சுவார்த்தையில் அவர்களும் அனுமதிக்கப்பட்டனர். 2 மணிநேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நீடித்தது.

அப்போது ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை முன்வைக்கும் வகையில் தங்களையும் அனுமதிக்க வேண்டும் என ஓய்வூதியர் சங்க உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து பேச்சுவார்த்தையில் அவர்களும் அனுமதிக்கப்பட்டனர். 2 மணிநேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நீடித்தது குறிப்பிடத்தக்கது. இதில் முடிவு ஏதும் எடுக்கப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியை தழுவ, இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனாலும், எந்த முடிவும் எட்டப்படவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE