சென்னை: “மாநில அரசுக்கு உதவும் வகையில் மத்திய அரசு எதாவது செய்துள்ளதா என்று பார்த்தால் இல்லை என்பதே வருத்தமளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது” என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று சென்னையில் நடந்த விழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் இருந்து பெற்ற வரியை விட தமிழக அரசுக்கு அதிகமாக நிதி வழங்கப்படுகிறது என்று கூறி வரி பகிர்வு குறித்து கருத்துக்கள் தெரிவித்தார். இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறும்போது, “கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் தான் 2021-ல் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது. 10 ஆண்டு காலம் நடந்த அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகளால் ஏற்பட்டிருந்த நிதி நெருக்கடி, அடுத்து வந்த கரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலும் திறமையாக சமாளித்தோம். ஆட்சிக்கு வந்தபோது கடும் நிதி நெருக்கடியிலும் கரோனா பெருந்தொற்று காலத்தில் நிவாரணமாக ரூ.4,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுத்துள்ளோம்.
மகளிருக்கு கட்டணமில்லா பயணம் திட்டம், திமுக அரசால் ஒருபோதும் செய்ய முடியாது என சிலரால் கூறப்பட்ட மகளிர் உதவித்தொகை திட்டத்தில் 1.13 கோடி மகளிர் மாதந்தோறும் ரூ.1,000 பெறும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகம் இரு பேரிடர்களை சந்தித்துள்ளது. பேரிடரில் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இன்றுகூட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இப்படி மக்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்துவருகிறது. ஆனால், ஒன்றிய அரசு அதற்கான ஊக்கத்தை, இந்த சுமைகளில் இருந்து மாநில அரசுக்கு உதவும் வகையில் எதாவது செய்துள்ளதா என்று பார்த்தால் இல்லை என்பதே வருத்தமளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது. ஒன்றிய நிதியமைச்சர் நேற்று தமிழகத்துக்கு வழங்கக்கூடிய வரிவருவாய் குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதுகுறித்து பேச வேண்டியது எனது கடமை.
» பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம்: தமிழக முதல்வர் அறிவிப்பு- யாரெல்லாம் பெறலாம்?
ஒன்றிய அரசு 2014 - 15ம் ஆண்டு முதல் 2022 - 23 ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ ரூ.4.75 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்துக்கு வழங்கியுள்ளது. இந்த ரூ.4.75 லட்சம் கோடியில் ரூ.2.46 லட்சம் கோடி என்பது மத்திய வரிகளில் இருந்து வரி பகிர்வாகவும், அதேபோல ரூ.2.28 லட்சம் கோடி என்பது தமிழகத்துக்கு கிடைக்கக்கூடிய மானியங்கள் மற்றும் உதவித்தொகை அடிப்படையில் வழங்கப்பட்டவை.
அதேநேரத்தில் நேரடி வரிவருவாயாக தமிழகத்தில் இருந்து ரூ.6.23 லட்சம் கோடி ஒன்றிய அரசு பெற்றுள்ளது. ஆனால், மறைமுக வரிவருவாய் குறித்து எந்த தரவுகளையும் அவர்கள் பகிர்ந்து கொள்ளவில்லை. தமிழகத்தில் இருந்து ஒன்றிய அரசுக்கு செல்லும் ஒரு ரூபாய்க்கு மீண்டும் அங்கிருந்து தமிழகத்துக்கு கிடைப்பது 29 பைசாதான். இதை ஏற்கனவே சட்டசபையில் கூறியுள்ளேன். ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த விகிதாச்சாரம் முற்றிலும் மாறுபட்டு உள்ளது. உதாரணத்துக்கு 2014 - 15ம் ஆண்டு முதல் 2022 - 23ம் ஆண்டு வரை பார்த்தால் பாஜக ஆளும் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் இருந்து ரூ.2.23 லட்சம் கோடி ஒன்றிய அரசுக்கு கொடுத்தால், அந்த மாநிலத்துக்கு மத்திய அரசு மூலமாக ரூ.15.35 லட்சம் கோடி திரும்ப கிடைத்துள்ளது.
12-வது நிதிக் குழு சமயத்தில் மத்திய வரியில் இருந்து தமிழகத்துக்கு 5.305% வரி பகிர்வாக நிதி ஆணையம் வழங்கியது. அதுவே, தற்போதுள்ள 15வது நிதிக் குழுவை எடுத்துக்கொண்டால், 4.079% ஆக குறைந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய உரிய நிதி வரவில்லை என்பதற்கு உதாரணமே இந்த புள்ளி விவரங்கள். இந்திய அளவில் இருக்கக்கூடிய மக்கள் தொகையில் 6.124% மக்கள் தொகை கொண்ட தமிழகத்துக்கு மத்திய நிதி ஆணையத்தில் இருந்து கிடைக்க வேண்டிய தொகையில் 4.079% மட்டுமே கிடைக்கிறது என்றால், நமக்கு கிடைக்க வேண்டிய சரியான தொகை கிடைக்கவில்லை என்பதே அர்த்தம்.
செஸ் மற்றும் கூடுதல் வரியை தனிப்பட்ட வருவாயாக மத்திய அரசு பெற்றுக்கொண்டு வருகிறது. இந்த வரியின் மூலமாக 2011-12ல் 10.04% மத்திய அரசு பெற்றது. அதுவே, தற்போது 28.01% அதிகரித்துள்ளது. ஒன்றிய அரசுக்கு தனிப்பட்ட வருவாயாக இது கிடைக்கிறது. தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தொகை குறைந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது. ஜிஎஸ்டி அமல்படுத்தும்போது மாநிலங்களுக்கான பங்கின் வருடாந்திர வளர்ச்சி என்பது 14 சதவீதமாக இருக்கும் என்றார்கள்.
ஆனால், அந்த அளவுக்கு வரவில்லை என்பது நிச்சயம். இதனால், தமிழகத்தின் நிதி ஆளுமைக்கான உரிமையை இழந்திருக்கிறோம். இதன்காரணமாக தமிழகத்தின் நிதி பற்றாக்குறை ரூ.20 ஆயிரம் கோடியாக இருக்கிறது. ஜிஎஸ்டி இழப்பீடு காலத்தை நீடிக்க 2022க்கு பிறகு கோரிக்கை விடுத்தும் ஒன்றிய அரசு நீடிக்கவில்லை.
சென்னை மெட்ரோ 2வது கட்ட திட்டம் ரூ.63,246 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 50 சதவீத நிதியை ஒன்றிய அரசு தரவேண்டும். இந்த திட்டத்துக்கான அடிக்கல்லை உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டினார். ஆனால், இன்று வரை அதற்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை. அதே காலகட்டத்தில் மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படும் மெட்ரோ திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. உத்தரபிரதேசம், டெல்லி, ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மற்ற மாநிலங்களுக்கு மெட்ரோ திட்டங்களுக்கு உரிய நிதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் 10 ஆயிரம் கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், சென்னை மெட்ரோ திட்டத்தை பொறுத்தவரை வெறும் 3,273 கோடி ரூபாய் தான் ஒன்றிய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அளவில் ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கக்கூடிய சதவீதம் என்பது 2.05% என்றுதான் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.18,000 கோடி தமிழகத்துக்கு கிடைத்துள்ளது.
ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் ஒன்றிய அரசு ரூ.72,000 கொடுக்கிறது. ஆனால், தமிழக அரசு ரூ.1.68 லட்சம் கொடுக்கிறது. அதேபோல், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்துக்கு ஒன்றிய அரசு ரூ.1,50 லட்சம் கொடுக்கிறது.
ஆனால், தமிழக அரசு ரூ.7 லட்சம் தருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்களாக இருந்தாலும் சரி, அவர்களின் நிதியுதவியுடன் நடக்கும் திட்டங்களாக இருந்தாலும் சரி மாநில அரசு அதிகமான பங்களிப்பை வழங்குகிறது. பெற்ற வரியை விட 2 மடங்காக நிதி கொடுத்துள்ளோம் என 10 ஆண்டுகளாக ஒன்றிய அரசு தெரிவிக்கிறது. ஆனால், விலைவாசி உயர்வு, பண மதிப்பு அதிகரிப்பு ஆகியவற்றை எல்லாம் ஒன்றிய அரசு கருத்தில் கொள்ளவில்லை.
மிக்ஜாம் புயல், தென்மாவட்ட வெள்ளம் ஆகியவற்றுக்காக கோரப்பட்ட வெள்ள நிவாரண நிதியை ஒன்றிய அரசு தற்போது வரை வழங்கவில்லை. மாநில அரசின் நிதியிலே, இதுவரை ரூ.2,027 கோடி வெள்ள நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகள் முழுவதும் மாநில அரசின் நிதியில் நடக்கிறது. ஒன்றிய அரசு உரிய பங்களிப்பை அளித்தால் இன்னும் வேகமாக பணிகளை முடிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
39 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago